கொரோனா 2-வது அலையால் படக்குழுவினர் பாதுகாப்பை கருதி படப்பிடிப்பை தற்போது தொடங்க வேண்டாம் என்றும் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடிக்கும் 65-வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நடத்த திட்டமிட்டனர்.
வணிக வளாகம் ஒன்றில் முக்கிய காட்சிகளை படமாக்கவும் முடிவு செய்தனர். ஆனால் கொரோனா 2-வது அலையால் அரசு ஏற்கனவே வணிக வளாகங்களை மூடி தற்போது முழு ஊரடங்கையும் அமல்படுத்தி உள்ளது.
வணிக வளாகங்கள் மூடப்பட்டதுமே ஸ்டுடியோவில் வணிக வளாக அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டனர். இதற்காக பிரமாண்டமான வணிக வளாக அரங்கு அமைக்கும் பணிகளை தொடங்கியதாகவும் அரங்கு அமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் நோய் தொற்றில் சிக்கி வருகிறார்கள். இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி,விவேக் உள்ளிட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தமிழ் திரைப்பட துணை நடிகர் மாறன் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்துள்ளார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே அவர் தற்போது சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
ஆதிவாசி என்ற கேரக்டரில் கில்லி படத்தில் நடித்த டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார். கொரோனா தொற்றால் திரையுலகினர் அடுத்தடுத்து மரணம் அடைவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இவரது இறப்பிற்கு பல நடிகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் நடிகர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் படக்குழுவினர் பாதுகாப்பை கருதி படப்பிடிப்பை தற்போது தொடங்க வேண்டாம் என்றும் தொழிலாளர்கள் அரங்கு அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டாம் என்றும் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.