நல்லக்கண்ணுவை தோற்கடித்தது யார்? பாஜகவின் உண்மையான B TEAM திமுக தான் ! – சீமான் பளார்.

Advertising

தமிழ் மண்ணிற்குப் பாஜக என்ற மதவாதக் கட்சியை 1998ல் அறிமுகப்படுத்தியது திராவிடக் கட்சித் தலைவி அம்மையார் ஜெயலலிதா. பின்பு அவர் 1999ல் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற்றபோது, ஆட்சி கவிழாமல் அதைத் தடுத்துத் தாங்கி பிடித்துப் பாஜகவைத் தமிழ் மண்ணில் தடம் பதிக்கச் செய்தவர் திமுகத் தலைவர் கருணாநிதி. காங்கிரசு அல்லாத “ஒரு கட்சியின் ஆட்சியை” பாஜகவை வைத்து இந்திய ஒன்றியத்தில் தரமுடியும் என்ற நிலை உருவாக முக்கியக் காரணம் திமுகதான். 1999ல் கருணாநிதி மட்டும் தோள் கொடுக்காதிருந்தால் பாஜக என்ற மதவாத கட்சி மத்தியில் முதன்முறையாக ஐந்தாண்டுகள் நிலையானதொரு ஆட்சியைத் தந்திருக்க முடியாது. அந்த ஐந்தாண்டுகளில்தான் பாஜக என்ற கட்சி இந்தியா முழுமைக்கும் வேர் பரப்பி, கிளை அமைத்து விச விருட்சமாக வளர்ந்தது. பாஜக என்ற கட்சியை இந்திய பெருங்கட்சியாக உருவாக்கியதில் மிக முக்கியப் பங்கு திமுகவிற்கு உண்டு.

1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்லாமியர்களை மதத்தீவரவாதிகள் என்று தமிழகச் சட்டமன்றத்தில் முதன் முதலாகப் பதிவு செய்தவர் யார் ?

1998 ல் கோவை கலவரத்தில் இஸ்லாமியர்களும், அவர்தம் உடைமைகளும் வேட்டையாடப்படும் போது ஆட்சி அதிகாரத்திலிருந்து வேடிக்கை பார்த்தது யார் ?

1999 ல் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து ஆர்எஸ்எஸ்வாதியான சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்த மண்ணின் மாசற்ற தூய அரசியல்வாதி, மனித புனிதர், தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தேர்தலில் நின்ற ஐயா நல்லக்கண்ணுவை தோற்கடித்தது யார்?

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு 21 இடங்களை ஒதுக்கி, பாஜக உறுப்பினர்களைத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முதன் முதலாக அனுப்பிவைத்து அழகு பார்த்தது யார் ? சாரணர் தேர்தலில் கூட வெல்ல முடியாத எச்.ராஜா என்ற தீவிர மதவாதியைக் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக்கி முதல் அரசியல் அடையாளம் தந்தது யார் ?

2009 ல் ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை நடைபெற்றபோது மத்தியில் ஆண்ட காங்கிரசு அரசைத் தாங்கி பிடித்ததுபோல், 2002 ல் குஜராத்தில் 3000 இஸ்லாமியர்கள் மதப்படுகொலை செய்யப்பட்டபோது அமைச்சரவையில் அங்கம் வகித்துப் பாஜக அரசைக் கவிழாமல் தாங்கிப் பிடித்தது யார் ?

2013 ஏற்காடு இடைத்தேர்தலில் கடிதமெழுதி பாஜகவிடம் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டது யார்?

ஆர்எஸ்எஸ் என்பது திராவிடர் கழகம் போல ஒரு சமூகநல அமைப்புத்தான் , அதைத் திமுகத் தொண்டர்கள் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்று சொல்லி முரசொலியில் கட்டுரை தீட்டியது யார் ?

தங்கள் கட்சி 90 சதவீதம் இந்துக்கள் நிறைந்த கட்சி என்று, பாஜகவைப்போலப் பெருமை பேசியது யார் ? நெருக்கடியான காலகட்டங்களில் தங்களுக்கு உதவி புரிந்தது திமுகதான் என ஆர்எஸ்எஸ்காரர்கள் நேரில் சந்தித்து என்று நற்சான்றிதழ் வழங்கியபோது எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அந்த அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டது யார்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒருபுறம் சனதான எதிர்ப்புப் பேசிக்கொண்டு , மறுபுறம் மதவாத பாஜகவைப்போல ஒரே ஒரு இஸ்லாமியருக்குக் கூட வாய்ப்பு வழங்காதவர்கள் யார் ?

தன்னைச் சிறுபான்மை காவலராகச் சொல்லிக்கொள்ளும் திமுக இதுவரை இசுலாமியர்களுக்குத் தங்கள் கட்சியில், ஆட்சி அதிகாரத்தில் அளித்துள்ள பிரதிநிதித்துவம் என்ன?

16 பேர்கொண்ட திமுக உயர்மட்ட குழுவில் எத்தனை இஸ்லாமியர்களை இடம்பெறச் செய்துள்ளது ? 70 ஆண்டுக்காலத் திமுக வரலாற்றில் இதுவரை எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இஸ்லாமியர்களாக இருந்துள்ளனர்.?

மத்திய பலம் வாய்ந்த அமைச்சகங்களைப் பேரம் பேசி வாங்கும் திமுக இதுவரை எத்தனை இஸ்லாமியர்களைத் தமிழகத்திலிருந்து அமைச்சராக அமர வைத்து அழகு பார்த்துள்ளது?

நேற்று பாஜகவுடன் திமுகக் கூட்டணியில் இருந்தது. இன்று அதிமுகப் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. நாளைக்கு மீண்டும் திமுகப் பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று யார் உறுதி தருவது? பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டோம் எனத் தொடக்கக் காலம் முதல் நாம் தமிழர் கட்சி உறுதிபடக் கூறுகிறது. பாஜகவுடன் இனி என்றுமே கூட்டணி கிடையாது என்று திமுக வெளிப்படையாக இதுவரை அறிவிக்காதது ஏன் ?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடினால் பாஜகவின் உண்மையான B TEAM திமுகதான் என்பது விளங்கும். திமுகவிற்கு வாக்களித்தால்தான் பாஜக உள்ளே வராது என்பதல்ல. திமுகவிற்கு வாக்களிப்பதே பாஜக உள்ளே வருவதைப் போன்றதுதான்.

அன்பான தமிழ்ச் சொந்தங்களே,

பாஜக உள்ளே வந்துவிடும் என்று பயப்படும் கோழைகள் திமுகவுக்கு வாக்கு செலுத்துங்கள்!

சீமான் இருக்கும் வரை பாஜக உள்ளே வரமுடியாது என்று நினைக்கும் வீரர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள்! என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!