சென்னை: மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூன் 25) நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒருமனதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராக பதவியேற்றார். அரசியல் சாசன பிரதியை கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார். அவர் பதவியேற்கும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.