தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தேர்தலில் திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத டாக்டர் பா.சரவணன் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.இணைந்த அன்றே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் டாக்டர் பா.சரவணன்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் இவரையே மீண்டும் போட்டியிடச் செய்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக பாஜக நிர்வாகிகள் மனக்கணக்கு போடப்பட்டு மதுரை வடக்கு தொகுதியில் சீட் ஒதுக்கப்பட்டு,திமுக வேட்பாளர் தளபதி அவர்களை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை, திமுக வேட்பாளர் தளபதியிடம் தோல்வியை தழுவினார் டாக்டர் பா.சரவணன்.
இந்நிலையில் டாக்டர் பா.சரவணன் மீது இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படும் காலாவதியான மருத்துவ உபகரணத்தை பயன்படுத்திய வழக்கு கடந்த ஆட்சியில் போடப்பட்டது, அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், அந்த வழக்கை காரணம் காட்டி திமுக தன்னை மிரட்ட நேரிடும் எனவும்,பாஜகவில் தனக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை எனவும் டாக்டர் பா.சரவணன் நினைப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவில் இணைந்த டாக்டர் பா.சரவணன் வடக்கு தொகுதியில் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டாரே தவிர அதன் பிறகு எந்த செயல்பாடுகளும் இல்லை எனவும் தேர்தல் தோல்விக்கு பின்னர் கடும் அமைதியாக அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுகவில் தனக்கு நெறுக்கமாக உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் சிலரை சந்தித்து மீண்டும் திமுகவில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழக முதல்வர்,திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கட்சியில் மீண்டும் இணையலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜகவில் இணைந்த முகுல் ராய் மீண்டும் மம்தா பானர்ஜியை சந்தித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது போன்று டாக்டர் பா.சரவணன் மீண்டும் திமுகவில் இணைய உள்ளார் என்ற தகவல் பரவலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.