காவல் துறைக்கு தனி அமைச்சகம் – குமுறும் காவலர்கள்… நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்களின் பணி போற்றுதலுக்குரியது. முன்களப்பணியாளர்களான இவர்கள் விடுப்பில்லாமல் களப்பணியாற்றுகின்றனர். தமிழக அரசு ஊழியர்களுக்கு  ஈட்டிய விடுப்பு அடுத்த ஒரு வருடத்திற்கு வழங்க முடியாது என்ற அறிவிப்பு மற்ற துறை அரசு ஊழியர்களுக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் காவல் துறையினர் மத்தியில் பெரும் வருத்தத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கு காலத்தில் 24 மணி நேரமும் சாலையில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கும் வேலையே செய்யாமல் வீட்டிலிருந்து முழு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கும் அதே நிலையா என கடும் கொந்தளிப்பில் தமிழக காவல்துறையினர் உள்ளனர். 

ஊதிய உயர்வு பெறும் நிலை:

சில அரசுத் துறை பணியாள்ர்கள்  50விழுக்காடு எண்ணிக்கையில் வேலை செய்கின்றனர். அதில் சிலர் உடல்நிலை சரியில்லாதவர்கள் என கணக்கில்லாமல் விடுப்பிலும் உள்ளனர்.இந்நிலையில் ஆசிரியர்கள் 2020 ஆம் வருடம் முழுவதும் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர் 2021 ஆம் வருடமும் அதே நிலைமை தான் தொடர்கிறது. ஆனால்  அவர்களுக்கும முழு சம்பளத்துடன்  சலுகைகளும் தவறாமல் கிடைக்கிறது. ஆனால் காலை முதல் மாலை வரை ஊரடங்கு காலத்தில் வெயில்,மழை என பாராது சாலையில் நின்றே பணி மேற்கொள்ளும் காவலர்களுக்கு அரசு  அளிக்கப்படும் மதிப்பும் சலுகையும் சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை.

 இதை விட பெரும்  கொடுமைகள் என்னவென்றால் முறையாக கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வும் கிடைக்காமல் நிறைய காவலர்கள் தவித்து வருகின்றனர்.தங்களது ஊதிய உயர்வைக் கூட கேட்டுப் பெறும் நிலையில்தான் காவலர்கள் உள்ளனர்.அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டிய அமைச்சு பணியாளர்கள் கணக்கே இல்லாமல் தொடர் விடுப்பிலும் உள்ளனர்.

லஞ்சம் வாங்கும் அவல நிலை:

காவல்துறையினர் எந்த ஒரு ஊதிய உயர்வு போன்ற அடிப்படை பிரச்சினைகளையும் அவர்களிடம் சென்று கெஞ்சியும் லஞ்சம் கொடுத்தும் பெறவேண்டிய அவல நிலை தான் நீண்ட நாளாக  உள்ளது.

குறிப்பாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் நிலைமை இன்னும் மோசம் எந்த ஒரு அரசாங்க பிரதி பலன்களும் இவர்களுக்கு முறையாக கிடைப்பது கிடையாது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடைபெறுகிறது.இதை கேட்பதற்கு அதிகாரிகளுக்கும் தைரியம் இல்லை என கடைநிலை காவலர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

ஆசிரியருக்கும்-காவலருக்கும் ஒரே பலனா..?

இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி ஏற்பட்டு தினம் செத்துக் கொண்டிருக்கும் காவலர்களுக்கும் அதே பலன்கள்… வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் அதே பலன்களா..? என கேள்வி எழுப்பப்பட்டு மிகுந்த மன வேதனையிலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் மருத்துவ உதவியாளர்கள் என அனைவருக்கும் அரசு சமீபத்தில் ஊக்கத்தொகை அளித்தது இது பாராட்டக்கூடிய விஷயம் ஆனால் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை அளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. காவல்துறையினருக்கு எந்த ஒரு ஊக்கத் தொகையோ அல்லது ஒரு பாராட்டுதல் கூட அறிவிக்கவில்லை என்ற மனவேதனையில் உள்ளனர்.

50 விழுக்காடு பணி:

ஊக்கத்தொகையும் வேண்டாம், பாராட்டுதலும் வேண்டாம் மற்ற அரசாங்கப் பணியாளர்களை போல எங்களுக்கும் 50 விழுக்காடு பணி செய்ய அனுமதிக்க வேண்டும் இல்லையேல் சொந்த விடுப்பில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று  ஒருமித்த குரலாக தமிழ்நாடு காவல் துறையினரிடையே ஓங்கி ஒலித்ததுக்கொண்டிருக்கிறது.

காவல்துறைக்கு தனி அமைச்சகம்:

உள்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை போன்ற பல்வேறு துறைகளை முதல்வர் தன்னகத்தே வைத்துக் கொள்வது அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளை தலையாட்டி பொம்மைகளாக்கி தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கும் செயலாகும். தமிழக காவல்துறையை சீர் செய்திடவும், காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், கடைநிலை காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை பணியில் இருப்போரின் மன அழுத்தத்தை போக்கிட போர்க்கால அடிப்படையில் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் போன்றவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

மேலும் அறிய க்ளிக் செய்யவும்
காவல் மக்களுக்கான சேவை

திமுகவும்-தேர்தல் அறிக்கையும்:

காவல்துறையில் செயல்படுபவர்களின் கோரிக்கைகள் பெருமளவில் கேட்கப்பட்டு அவை குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பணியாற்றினால் எஸ்.ஐ, சட்டம்- ஒழுங்கு பணியில் உயிர் நீத்தால் இழப்பீடு ரூ.1 கோடி எனப் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக காவல்துறையினருக்கு உள்ள பெரும் குறையே அவர்கள் குறைகளை எடுத்துச் சொல்ல ஒரு சங்கம் இல்லை, உயர் அதிகாரிகள் மனது வைத்து கேட்டால் மட்டுமே குறை தீரும். ஆனாலும் ஒட்டுமொத்தக் குறைகளை தீர்க்க எந்தவித அமைப்பும் இல்லை.

பிரிட்டீஷ் கால அடிமை மனோபாவத்துடன் நடத்தப்படும் துறைகளில் முதன்மையான துறை காவல்துறைதான். அதிலும் அடிமட்டத்திலுள்ள கிரேட் 2, கிரேட் 1 வகை காவலர்கள் நிலை படுமோசம். விடுப்பு கிடைக்காத விரக்தியில், மன உளைச்சல் , சிறு குற்றங்களுக்குப் பெரிய தண்டனை என பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்த சம்பவங்கள் பல மதிப்புமிகு உயிர்கள் பறிபோகக் காரணமாக அமைந்தது.

பொதுமக்களிடம் அதிகார தோரணை மிக்கவர்களாக வலம் வரும் போலீஸார் தங்கள் பிரச்சினைகளுக்காக அதிகாரிகளிடமும், அமைச்சுப் பணி அதிகாரிகளிடமும் கூனிக் குறுகி நிற்கும் நிலை இதுவரை பலரது மனக்குறையாக உள்ளது. அதிலும் பெண் காவலர்கள் நிலை மிக மோசம். தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை மேலிடத்தில் புகாராளிக்கக்கூட சொல்ல முடியாமல் வேலை பார்ப்போர் அதிகம்.

இவை ஒருபக்கம் தீர்க்க முடியாத பிரச்சினைகள், இதற்கு சங்கம் ஒன்றே தீர்வு என போலீஸ் தரப்பில் எழும் குரலும் அடக்கப்படுகிறது. அடிப்படை உரிமைகள் கூட கிடைப்பதில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியும் உரிய காலத்தில் பதவி உயர்வு இல்லாத நிலை, சிறு முணுமுணுப்புக்கும் சார்ஜ் கொடுக்கப்பட்டு பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு பாதிப்பு.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா..?

  • பணியில் உயிரிழக்கும் போலீஸார் குடும்பத்திற்கு குறைந்த இழப்பீடு, முக்கியக் கோரிக்கையான வார விடுப்பு.
  • அனைத்துக் காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்.
  • சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியின்போது காவலர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன், இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்படும். உயிர் நீத்தவர்கள் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் ஆறுதல் தொகை வழங்கப்படும்.
  • காவல் துறையினருக்குப் பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்கில் அவர்களின் பணி நாட்கள் உயர்த்தப்படும். ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும்.

காவல் ஆணையம் (Police commission):

  • தமிழகத்தில் முதல் போலீஸ் கமிஷன் அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று, நடைமுறைப்படுத்திய பெருமை கருணாநிதி தலைமையிலான திமுக அரசையே சாரும்.அதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மீண்டும் திமுக அரசு அமைந்ததும், போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு ஒரு கால வரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

  • காவலர் குறைகளைக் கேட்டறிந்து, பரிசீலித்து அவற்றைச் சரி செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் குறை தீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

  • காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வுகள் பெறவும் வழி வகுக்கப்படும் .

  • காவலர் பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் கால தாமதமின்றி வழங்கப்படும்.

  • காவலர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப் படி, இடர்காலப் படி உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தி வழங்கப்படும்.

  • இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணியில் சேருபவர்களும் ஏழு ஆண்டுகள் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்தவர்களும், பத்து ஆண்டுகளில் தலைமைக் காவலராகவும், இருபது ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஐ எனப் பதவி உயர்வும் வழங்கப்படும் என காவல்துறையினருக்கான அறிவிப்புகளாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்து.

இதைத்தொடர்ந்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, பல்வேறு துறையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து துரிதமாக செயல்பட்டு வரும் வேளையில் காவலர்களின் கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising

Leave a Reply

error: Content is protected !!