சித்த மருத்துவத்தின் பயன்கள் அனைத்து பொதுமக்களும் கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – 4வது தேசிய சித்த மருத்துவ விழா, சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் இயக்கத்தை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், வேண்டுகோள்.
4வது தேசிய சித்த மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய சித்த மருத்துவ தினமானது, பதிணென் சித்த மருத்துவர்களில் முதன்மையானவரான அகத்திய முனிவரின் பிறந்த தினமான மார்கழி மாதத்திலுள்ள ஆயில்யம் நட்சத்திரத்தை கொண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில், நடைபெற்ற 4-வது தேசிய சித்த மருத்துவ விழா, சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் இயக்கத்தை துவக்கி வைத்து, கூறியதாவது –
கொரோனா காலத்தில் சித்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் குடும்ப சூழ்நிலைகள், தன்நலன் ஆகியவற்றை பார்க்காமல், அர்பணிப்புடன் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். உங்கள் அனைவரையும் மிகவும் பாராட்டுகிறேன். சித்த மருத்துவம் என்பது வருமுன் காப்போம் என்பதே ஆகும்.
நோய் வந்தபின் சிகிச்சை எடுத்துக்கொள்வதை விட, நோய் வராமல் தடுப்பதுதான் சிறந்தது. அவ்வாறு நோய் வராமல் தடுப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு மிகவும் அதிகம். கொரோனா காலத்தில் நோய் பரவாமல் தடுப்பதிலும், எதிர்பாற்றலை உருவாக்குதிலும் சித்த மருத்துவம் அதிகளவில் பயன்பட்டது. ஆயுஷ் கேர் சென்டரில் 300 நோயாளிகள் பரிசோதனைகள் செய்து கொண்டனர். கொரோனா காலத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர், ஆரோக்கிய பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், கோவிட் கேர் சென்டர்களில் நேயாளிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக யோகா பயிற்சி, முத்திரை பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ முறைகளை கடைபிடிக்கவும், நீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்கவும், உணவு உண்டபின் சிறிது தூரம் நடக்கவும் வேண்டும். மேலும், அருகிலுள்ள இடங்களுக்கு செல்லும்போது வாகனங்ளை தவிர்த்து, நடந்து செல்ல வேண்டும். கோவிட் காலத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு என்பது கருப்பொருளாகும். கோவிட் தொற்றுக் காலத்தில் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீரை மக்கள் அனைவரும் பயன்படுத்தி, கொரோனா நோயிலிருந்து தற்காத்துக்கொண்டார்கள். நாம் ஆன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மூலப்பொருட்களே கொரோனா தொற்றுநோயை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக பயன்படுத்தபட்டுள்ளது. எனவே, நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் மருத்துவ தன்மையை அறிந்து கொள்வதற்காக இன்றைய தேசிய சித்த மருத்துவ தினத்தில் மூலிகை கண்காட்சிகள், கோவிட் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அகமருந்துகள், புறமருந்துகள் மலர் மருத்துவம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகள், சிறுதானியங்கள் அஞ்சறைப்பெட்டி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மருத்துவதுறையில் அலோபதி மருத்துவமுறை இருந்தாலும், சித்த மருத்துமுறை அதிகளவில் பயன்பட்டுவருகிறது. சித்த மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்ல அறிவியல் பூர்வமாக முயற்சி செய்ய வேண்டும். சித்த மருத்துவத்தின் பயன்கள் அனைத்து பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில், மேலும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
விழாவில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஜெ.மேபல் அருள்மணி, அரசு ஆயுர்வேதா மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்
ஜெ.கிளான்ஸ் டேவி, உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் மீனா (நடுவூர்கரை) சுரேஷ் (அகஸ்தீஸ்வரம்), அனிதா (வெள்ளிச்சந்தை), உதவி மருத்துவ அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.