விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சியின் வேட்புமனுக்கள் உட்பட 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் 14-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. 21-ம் தேதி மொத்தம் 64 மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை திங்கள்கிழமை காலை 11 மணியளவில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழு பரிசீலனை செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
மொத்தம் 64 மனுக்கள் அளித்தவர்களின் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசீலனை நடைபெற்றது. பின்னர், 12.30 மணியளவில் பரிசீலனையில் திமுக, பாமக நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சி மனுக்கள் உட்பட 29 மனுக்கள் ஏற்றுக் கொள்வதாகவும், 35 மனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார்,
சுயேச்சை வேட்பாளர்களான கனியாமூர் பள்ளி மாணவியின் தாய் செல்வி, விநாயகம், இசக்கிமுத்து ,கோவிந்தராஜ், முத்துக்குமார் சாமிநாதன் ஆகியோர் உதவி தேர்தல் அலுவலரின் செயல்பாடுகளை எதிர்த்து அலுவலகத்தில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். “நாங்கள் முறையான வகையில் மனுக்கள் அளித்திருக்கிறோம். எங்கள் மனுக்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினர்.அவர்களிடம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சட்டப்படி இதற்கு தீர்வுகாணுமாறு கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோன்று மாற்றுத் திறனாளி வேட்பாளரான திருக்கோவிலூர் ஆலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மனுக்கள் பரிசீலனை நடைபெறும் முதல் தளத்துக்குச் செல்ல உரிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.