
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதில் தோப்பூர் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி முதல் கூத்தியார்குண்டு வரை உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியரான கதிரேசன்(27) என்பவர் மின்கம்பத்தில் ஏறி இணைப்பை துண்டிக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் நிலை குலைந்தார்.
இடுப்பில் கட்டப்பட்ட கயிற்றின் உதவியால் மின்கம்பத்தில் இருந்து கீழே விழாமல் மின்கம்பத்திலிலேயே தொங்கியபடி கிடந்தார். உடனடியாக அருகில் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக கதிரேசன் என்ற இளைஞர் உயிர் தப்பினார். ஊழியருக்கு மின்சாரம் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.