பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது.

வேலூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்காவுக்கு உட்பட்ட இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜன் (48). இவர், தனது விவசாய நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய இலவம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

பட்டா பெயர் மாற்றம் செய்ய இலவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரேவதி (35), ரூ.3,000 லஞ்சம் தர வேண்டும் என நடராஜனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, நடந்த பேரத்தில் ரூ.2,000 கொடுப்பதாக நடராஜன் கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்த கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ரூ.2,500 கொடுத்தால் மட்டுமே பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தரப்படும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி நடராஜன், வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், ரசாயனம் தடவிய ரூ.2,500 ரூபாய் நோட்டுகளுடன் இலவம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நடராஜன் இன்று (டிச.16) வந்தார்.

அப்போது, பணியில் இருந்த ரேவதியிடம் ரூ.2,500-ஐ வழங்கியபோது அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலர் ரேவதியைக் கையும், களவுமாகக் கைது செய்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்த பிறகு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

error: Content is protected !!