திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் 189வது அவதார தினவிழா

திருச்செந்தூர் அவதாரபதியில் 189வது அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பதியில் இன்று 189வது அவதார தினவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகபடிப்பு, அன்னதர்மம் நடந்தது. மதியம் உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மம், இரவு 7 மணிக்கு பணிவிடை நடந்தது. தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் ‘சான்றோர்களின் துவையல் தவசு’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான பேச்சு போட்டியும், ‘அய்யா வைகுண்டர் கூறிய தர்மயுக வாழ்வு’ என்ற தலைப்பில் பெரியவர்களுக்கான பேச்சு போட்டி நடந்தது. தொடர்ந்து அய்யாவழி சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. பின்னர் குரு சிவச்சந்திரரின் அய்யாவின் அருளிசை வழிபாடு நடந்தது. இரவு அன்னதர்மும் நடந்தது.

189வது அவதார தினவிழா இன்று நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு, அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் ஆகியவை நடந்தது. காலை 6.30 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது திரளான மக்கள் “அய்யா சிவ சிவ அரகரா அரகரா” என்று முழங்கி வழிப்பட்டனர். தொடர்ந்து அவதாரவிழா பணிவிடை, அன்னதர்மம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விழாவில் வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் வக்கில் சந்திரசேகரன், தலைவர் வள்ளியூர் தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை தலைவர்கள் அய்யாபழம், விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, இணை செயலாளர்கள் ராதாகிருஷண்ன், தங்ககிருஷ்ணன், வரதராஜபெருமாள், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் பிரதிநிதி, ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், வள்ளியூர் அன்பழகன், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

error: Content is protected !!