தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் உடன்குடி பஜாரில் உள்ள ஒரு காய்கறி கடைக்கு சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு பைக்குள் போடுவதற்காக அதில் இருந்த மற்றொரு மஞ்சள் நிற பையை வெளியே எடுத்து வைத்தார். பின்பு மணிபர்சில் பணம் எடுத்து கொடுத்தார்.அப்போது மணப்பாடு செல்லும் பஸ் வந்தது. உடனே அவசரம் அவசரமாக பஸ்சில் அவர் ஏறி சென்றுவிட்டார்.
பின்பு ஊருக்கு போய் காய்கறிகளை எடுத்து விட்டு மஞ்சள் பையை தேடியபோது மஞ்சள் பை காணவில்லை. உடனே அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மீண்டும் மற்றொரு பஸ்சில் ஏறி உடன்குடிக்கு வந்தார். காய்கறி வாங்கிய கடையில் வந்து கேட்ட போது கடைக்காரர் மஞ்சள் பையை எடுத்துக் கொடுத்தார். உடனே அந்த பெண் அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் ரூ.46 ஆயிரம் இருந்தது. அந்த பையை ஒப்படைத்த கடைக்காரருக்கு அந்த பெண் நன்றி தெரிவித்துச் சென்றார்.