நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் இனியவன் மீது பாஜக புகார்

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் இனியவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் நேற்று புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சென்னை பெருங்குடியில் கடந்த 17-ம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். இந்த பேச்சால் தமிழக பாஜக தொண்டர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன், நம் நாட்டில் உள்ள பெண் சக்தியின் பிரதிநிதி மற்றும் மத்திய அரசின் மிக முக்கியமான அமைச்சகங்களில் ஒன்றில் தலைமை தாங்குகிறார். எனவே, அவர் குறித்து அவதூறாக பேசிய இனியவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இனியவன் என்ற நபர், தான் ஒரு அரசு ஊழியர் என்று சொல்லிக்கொண்டு நிதியமைச்சரை, தரக்குறைவாக பேசியதோடு, பிரதமரை மிக அவதூறாக பேசியுள்ளது திமுகவின் வெறுப்பு அரசியலை, தரம் தாழ்ந்த அரசியலை உணர்த்துகிறது. அவரோடு சேர்ந்து தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனியும் பேசியுள்ளார்.

திமுக பெண் அமைச்சரையோ, முதல்வரின் குடும்பத்தினரையோ அல்லது வேறு பெண்ணையோ பொது வெளியில் கண்ணியக் குறைவாக யாராவது பேசியிருந்தால் தமிழக காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்குமோ, அதே நடவடிக்கையை இனியவன் மற்றும் லியோனி ஆகியோர் மீது எடுக்க வேண்டும். மேலும், உடனடியாக இருவரையும் பணி நீக்கம்செய்ய வேண்டும்’’ என்று கூறி யுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!