குமரி மாவட்டம் குளச்சல் அருகே நகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி..நாய்களுக்கு விஷம் வைத்ததோடு மின் இணைப்பையும் துண்டித்து துணிகரம். சி.சி.டி.வி காட்சிகளை வைத்து குளச்சல் போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஆலஞ்சி பகுதியை சேர்ந்தவர் தாமஸ் ஜெகன் பிரபு இவர் அந்த பகுதியில் வீட்டருகே நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் காலை தனது நகைக்கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டுகள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
மேலும், இவரின் கடையின் அருகே இரண்டு நாய்களும் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையை திறந்து பார்த்த போது கடையில் எந்த பொருட்களும் கொள்ளை போகாமல் அப்படியே இருந்தது.
எனினும் சந்தேகமடைந்த அவர் தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அவர் கடை முன் வந்த மூன்று மர்ம நபர்கள் கடப்பாறை கம்பிகளுடன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அதற்கு முன் அந்த பகுதியில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்ததும், அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய்களுக்கு விஷம் வைத்ததோடு மின் விளக்குகளையும் சேதப்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து தாமஸ் ஜெகன் பிரபு சி.சி.டி.வி காட்சி ஆதாரங்களுடன் குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி உள்ளன.