ஆறுமுகநேரியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சக்திவேலன் மனைவி பால்கனி (83). இவரது கணவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. பால்கனி தனக்கு சொந்தமான வீட்டில் ஒரு இடத்திலும், அடுத்த வீட்டில் அவரது மகனும் வசித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 27-ந் தேதி பால்கனி வீட்டுக்கு 2 வாலிபர்கள் வந்தனர். தங்களது உறவினர் குழந்தைக்கு பார்வை பார்க்க வேண்டும் என்று கூறினர். அதற்கு பால்கனியும், வெற்றிலை பாக்கு வாங்கி வா என்று கூறியுள்ளார். அதற்கு வாங்கி வருகிறோம் என்று கூறிக்கொண்டே மூதாட்டியிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றார்.
அப்போது 2 வாலிபர்களும் பின்தொடர்ந்து சென்று பால்கனி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். பின்னர் வெளியே வந்து மற்றொருவர் தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி வேகமாக தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடினர். மேலும் தெருக்கள் மற்றும் பஜாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காயல்பட்டினத்தை அடுத்து ரத்தினபுரி அருகே ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் மீண்டும் வந்த வழியே வேகமாக திருப்பினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று அவர்களை பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். பின்னர் நடத்திய தீவிர விசாரணையில், ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் விஷ்ணு (20), வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் சின்னத்துரை (23), திருச்சி மாவட்டம் சோழிங்கநல்லூரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் சபரிநாதன் என்பதும், மூதாட்டி பால்கனியிடம் இருந்து 10 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.