காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மமமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவத்தால் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் பொதுமக்கள் காவல்துறையினரைக் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அனைக்கரைப்பட்டியை சேர்ந்தவர்கள் கண்ணியப்பன்-பாண்டியம்மாள் தம்பதிக்கு இதயக்கனி, சந்தோஷ், ரமேஷ் என மூன்று மகன்கள். இவர்கள் வாழைத்தோப்பு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த மாதம் இதயக்கனி அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய அழைத்து சென்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், மைனர் பெண்ணை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் சாப்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கம் போல் நேற்று முந்தினம் இரவு ரமேஷை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் காலை வரை அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று விசாரித்தபோது ரமேஷை அனுப்பி வைத்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகேயுள்ள மரத்தில் ரமேஷ் தூக்கில் தொங்கியதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே ஊர் மக்கள் திரண்டு ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பாதவும், விசாரணையின்போது போலிசார் ரமேஷை அடித்து கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி தூக்கில் தொங்கி கொண்டிருக்கும் உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேரையூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சாத்தான்குளத்தில் தந்தை மகனை காவல்துறையினர் அடித்துக் கொன்றதாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதுபோல் இங்கும் காவல்துறையினர் தாக்குதலில் ரமேஷ் மரணமடைந்ததாக கூறிய உறவினர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுரை மாவட்ட எஸ்.பி சஜித்குமார் தலைமையிலான காவல்துறையினர் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 174 பிரிவின்படி வழக்கு பதிவு செய்து உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தது காவல்துறை. இந்த மரணத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.