இந்தியா, ஜப்பான் அரசுகளிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1264 கோடி கடன் ஒப்பந்தம் 2020டிசம்பரில் கையெழுத்தாகும், அடுத்த 45 மாதங்களில் பணிகள் முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜிக்கா) கடனாக வழங்குகிறது. 2022 செப்டம்பரில் பணிகள் முடிக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை பிரதான கட்டுமான பணி துவங்கவில்லை. சுற்றுச்சுவர் பணி மட்டும் நடக்கிறது. மதுரை வந்த ஜிக்கா குழு தோப்பூரில்ஆய்வு செய்து, அரசின் அறிக்கை, தங்களின் ஆய்வு அடிப்படையில் பிரதான திட்ட அறிக்கையை தயாரிக்க ஜப்பான் திரும்பியது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் மதுரை எய்ம்ஸ் நிலை குறித்து தகவல் கோரினார். பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், ‘பிரதான பணிக்கு முந்தைய துவக்க பணி நடக்கிறது. இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரதான பணிக்கு டெண்டர் விடப்படும். டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அடுத்த 45 மாதங்களில் பணிநிறைவு பெறும்’ என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அடிக்கல் நாட்டி 19 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் மூன்று மாதங்கள் கழித்து தான் நிதியே கிடைக்க உள்ளது. எனவே 2024 செப்டம்பரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை முழுவடிவம் பெறும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசு தந்த தகவல்படி, டில்லிக்கு பிறகு 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும் 7 மருத்துவமனைகளின் பணிகள் பாதி நிறைவு பெற்று செயல்படத் துவங்கி விட்டன. மதுரை உள்ளிட்ட எஞ்சிய 9 மருத்துவமனை கட்டுமான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. நாட்டின் மற்ற இடங்களில் அமையும் எய்ம்ஸ் ருத்துவமனைகளுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு மட்டும் தான் ஜிக்காவிடம் கடனுதவி எதிர்பார்க்கும் சூழல் உள்ளது.
இதுதான் மதுரை எய்ம்ஸை தாமதப்படுத்துகிறது. 2022 செப்டம்பரில்.,ல் முடிக்க வேண்டிய பணிமேலும் இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போகும் சூழல் வந்துள்ளது. டிசம்பரில்., கடன் அனுமதிக்கப்பட்ட பிறகு, பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தை இறுதி செய்வது, ஒப்பந்தப்புள்ளி வழங்குவது என பணி துவங்கவே 5 மாதங்கள் வரை ஆகலாம். 2022ல் எய்ம்ஸ் கிடைத்துவிடும் என்ற தமிழக மக்களின் கனவு தகர்ந்துள்ளது. எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க முன்வர வேண்டும்.
அடிக்கல் நாட்டியப் பிறகும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் இழுத்துக்கொண்டே செல்வது வேதனை. 2019 ஜன., திட்டப்படி ரூ.1264 கோடி தேவைப்படும் என கணிக்கப்பட்டது. தாமதத்தால் தேவைப்படும் நிதி 20 முதல் 25 சதவீதம் வரை உயரும் அபாயம் உள்ளது. கூடுதலாக தேவைப்படும் நிதியை பெறவும் இன்னொரு போராட்டம் தேவைப்படலாம். பிற எய்ம்ஸ் அமையும் இடங்களில், நிர்வாக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் மதுரைக்கான அலுவலக பணியை டில்லியில் இருந்து கவனிக்கின்றனர். இதனால் நடைமுறைச் சிக்கல் அதிகம். உடனடியாக நிர்வாக அலுவலகத்தை மதுரையில் நிறுவ மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தலாம்