
ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, திமுக அரசின் மூன்று ஆண்டுகால சாதனை விளக்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் காலனி அண்ணா சிலை அருகே நேற்று இரவு (ஜூன் 12) நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றி பேசுகையில், “பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே நமது தமிழகம் தான் 9 சதவிதம் பங்கை தருகிறது. அதிலும் உள்நாடு உற்பத்தியில் (தமிழகம்) நாம் தான் இரண்டாமிடத்தில் இருக்கின்றோம். இந்தியாவின் வளர்ச்சி 7.24 சதவீதம் என்றால் தமிழகம் வளர்ச்சி 8.24 சதவீதம் இருக்கிறது. இது தான் திமுக ஆட்சியின் சாதனை. ஏற்றுமதி குறியீட்டில் நாம் முதலிடத்தில் வந்துவிட்டோம்.
தொழிலாளர் முதலீடு என்று வரும்போது 14 வது இடத்தில் இருந்த தமிழகம் இப்போது 3 வது இடத்திற்கு கொண்டுவந்தவர் முதல்வர் ஸ்டாலின். சுமார் ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமானாலும், தொடக்க பள்ளிக்கு செல்லும் 16 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வர ஆண்டுக்கு ரூ.400 கோடி ஆகும் என்று அதிகாரிகள் கூறியபோதும் 800 கோடியானாலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கிய பின், கல்வி அறிவு தருகிறேன் என்று கூறியவர் நமது முதல்வர்.
நான் முதல்வன் திட்டம் மூலம் 25 மாணவர்கள் லண்டனுக்கு பல்கலைக்கழக பயிற்சிக்கு சென்றுள்ளார்கள். 2021-ம் ஆண்டு 966 பெண்கள் மட்டுமே ஆரம்பித்த ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இருந்தது. இன்று 3,163 ஸ்டார்ட் அப் கம்பெனிகளை பெண்கள் நடத்துகிறார்கள். அது மூன்று மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது என்று சொன்னால் இது தமிழக முதல்வரின் சாதனையே. மிக விரைவில் தமிழகத்தின் முதல்வர் உடன், கூகுள் பிக்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது” என தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையில் பேசுகையில், “தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் தேர்தல் சமயத்தில் அறிவித்த திட்டங்களில் 90 சதவீதத்திற்கும் மேல் திட்டங்களை நிறைவேற்றி தமிழக மக்களின் பேரன்பை பெற்ற ஒரே முதல்வர் நமது தமிழக முதல்வர் மட்டுமே. ஆகையால் தான் திமுக 40க்கு 40 வெற்றி பெற்றது. திமுக ஆட்சியின் திட்டங்கள் கீழ் மட்ட அளவில் போய் சேர்ந்துள்ளது என்பதால் அனைத்து மக்களும் வாக்களித்துள்ளனர்” என கூறினார்.
இந்த கூட்டத்தின் நிறைவாக சுமார் 2000 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், அன்பின் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.