கன்னியாகுமரி: தோட்டக்கலைத்துறை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், நேரில் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்திற்கு உட்பட்ட இறச்சகுளம், திருப்பதிசாரம் செண்பகராமன்புதூர் ஆரல்வாய்மொழி ஆகிய கிராமப்பகுதிகளில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறைகளின் சார்பில், நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் , நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தோவாளை வருவாய் வட்டார பகுதிகளில், பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ், இறச்சகுளம் கிராமத்தில் வன்னியபெருமாள், சுப்பையன் பிள்ளை என்ற விவசாயினுடைய TPS.3 நெல் அறுவடை பரிசோதனை திடல் அறுவடையில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, திருப்பதிசாரத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையப்பணிகளையும், அந்நிலையத்திலுள்ள டி.விரிடி உற்பத்தி கூடம், சிப்பி காளான் விதை உற்பத்தி கூடம், உணவு காளான் உற்பத்தி கூடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களும் தரமானதாக உள்ளதா என்பதை துறைச்சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்ததோடு, நெல் வயல்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளில் குருத்துப்பூச்சிக்கான இனக்கவர்ச்சிப்பொறி மற்றும் உளுந்து வரப்பு பயிர் போன்றவையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தோட்டக்கலைத் துறையின்கீழ், செண்பகராமன்புதூர் கிராமத்தில் தேசிய
தோட்டக்கலை இயக்க திட்டத்தின் சார்பில், சுந்தரம் என்பவருடைய வீரிய இரக வெண்டை பரப்பு விரிவாக்கம் திடல் ஆய்வு செய்ததோடு, அந்த விவசாயி பின்பற்றி வரும் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி தெரிந்து கொள்ளப்பட்டது. மேலும், ஆரல்வாய்மொழி கிராமத்தில் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்ட திடல் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின்கீழ் நாட்டு பசுமாடு, மண்புழு உர கூடம், வாழை பயிர், ஆடு, நாட்டு கோழி, தேனீ பெட்டிகள் அமைத்தல் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான அனைத்து கடனுதவிகள் உட்பட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், மத்திய, மாநில அரசால் வழங்கப்பட்டு வரும், அனைத்து நலத்திட்டங்களும் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடைய வேண்டுமென்று, துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆறுமுகம், திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுதாமதி, கவிதா, தோவாளை வட்டார துணை வேளாண் அலுவலர் கணபதிசாமி, பயிர் காப்பீடு நிறுவன அலுவலர், களப்பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!