கமல் சரிப்பட்டு வர மாட்டார்…மக்கள் நீதி மய்யத்தின் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன், பொன்ராஜ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் திடீரென விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

அவர் உள்பட அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனைவரும் படுதோல்வியடைந்தனர். இந்நிலையில், தேர்தலில் சந்தித்த தோல்விக்கான காரணம் குறித்து கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.

இதில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் விலகியுள்ளார். அதற்கான விளக்கத்தை கமல்ஹாசனிடம் அவர் அளித்துள்ளார். விலகியது குறித்து மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மிகப்பெரிய தோல்விக்கு பிறகும் கமல்ஹாசனின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை.

அவர் மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. அவருடைய செயல்பாட்டில், ஜனநாயகம் இல்லை. விலகும் முடிவை ஒரே நாளில் நான் எடுக்கவில்லை. விலகலுக்கான காரணத்தை விளக்கி 14 பக்க விளக்கக் கடிதத்தை அளித்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மற்றொரு துணைத் தலைவரான பொன்ராஜூம் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களாக டாக்டர்.ஆர். மகேந்திரன், எம்.முருகானந்தம், மெளரியா ஐபிஎஸ் (ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே.குமரவேல், சேகர், சுரேஷ் அய்யர் ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர்,

இந்த ராஜினாமா கடிதங்கள் குறித்து தலைவர் விரைவில் பரிசீலனை செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் கூட்டோடு ராஜினாமா செய்துள்ளது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கான நம்பிக்கையை இழந்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!