தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியில் பழமையான கல்செக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஆறுமுகநேரியை சேர்ந்த தவசிமுத்து தெரிவித்துள்ளதாவது: குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் பழமையான கல்செக்கு இருப்பது குறித்து அப்பகுதியை சேர்ந்த ரானா அருண்குமார் என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில் அப்பகுதிக்கு சென்று கல்செக்கு ஆய்வு செய்யப்பட்டது. அந்த கல்செக்கு 4.08அடி விட்டமும், 3.75 அடி உயரமும் உள்ளது. அந்த கல்வெட்டு மூலம் கல்செக்கின் காலம் கி.பி.1888 என்பது மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த கல்செக்கானது 18ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் இப்பகுதியில் விவசாயம் அதிகளவில் நடந்துள்ளது. அதன் மூலம் வணிகம் அதிகம் நடந்துள்ளதற்கான வாய்ப்புகளும், பல்வேறு சமுதாய மக்களின் தொழில் நிறுவனங்கள் நிறைந்த விவசாய வளமிக்க பகுதியாக இருந்தது என்பது தெரியவருகிறது. மேற்கண்ட காரணங்கள் மூலம் மானவீரவளநாடு, மாநாடு, குரும்பூர் பட்டணத்தில் நாலுமாவடி இருந்துள்ளது தெரிகிறது. கொப்பரைத்தேங்காய், எள், நிலக்கடலை ஆகியவற்றை கல்செக்கு மூலம் அரைத்து எண்ணெய் வீட்டிற்கும், பிண்ணாக்கை மாட்டிற்கும் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் தவசிமுத்து தெரிவித்துள்ளார்.