மதுரை மவாட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி கிராம விவசாய நிலங்களை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தனது விரிவாக்கத்திற்காக கையகப்படுத்த இருப்பதாக வந்த தகவலையடுத்து,அதனை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள்,அரசு அலுவலர்கள்,உழவர் ஆர்வலர்கள் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு ஆகியோர்களால் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் அப்பகுதி விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை கூறினர்.நிலையூர் பெரிய கண்மாய் பாசன வசதி கொண்டு சுமார் 2,500 ஏக்கரில் நெல், வாழை பயிரிட்டு வருகிறோம்.இப்பகுதியிலிருந்து 1965-1967-ஆண்டுகளில் சுமார் 500 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு கப்பலூர் சிட்கோ இயங்கிவருகிறது.அதில் ஒரு பகுதியை 2001ம் ஆண்டு இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு விநியோகம் நடந்து வருகின்றது. தனியாக இரண்டு ரயில் பாதையும் ஏற்படுத்தி செயல்படுகின்றது.
இந்நிலையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் திரவ எரிவாயு விரிவாக்கத்திற்காக நிலையூர் 1வது ஊராட்சி கூத்தியார்குண்டு பகுதி மற்றும் நிலையூர் 2வது ஊராட்சி கருவேலம்பட்டி பகுதியிலும் நெல்,வாழை இரு போகம் விளையக்கூடிய நன்செய் நிலங்களை சுமார் 50 ஏக்கருக்கும் மேலாக கையகப்படுத்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எடுத்துவருகிறது.
மேற்படி நன்செய் நிலங்கள் தான் எங்கள் வாழ்வாதாரம் எனவும் மேலும் மேற்படி நிலங்கள் வைகை நதியின் நீர் ஆதாரத்தை கொண்டு நெல், வாழை உற்பத்தி செய்து வருகிறோம் எனவும்
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் விவசாயி தான் எங்கள் முதுகெலும்பு என பெருமையுடன் கூறிவரும் கூற்று உண்மை எனில் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் விளைநிலம் கையகப்படுத்த முனைவதை தடுக்க வேண்டும் என மதுரை
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், அரசு உயர் அதிகாரிகள், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கும் கிராம மக்கள் சார்பில் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் முடிவை மாற்ற வலியுறுத்தும் வகையில் கோரிக்கை மனு அளித்தனர்.