சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்.

மதுரையில் பாரம்பரியத்தை முன்னெடுக்கும் வகையில் இம்முறை சேவலுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரேவதி வேட்புமனு தாக்கல் செய்ய சேவலுடன் வந்து, தமிழ்க்கடவுள் என போற்றப்பட்டு வரும் முருகனின் அறுபடைவீடுகளில் முதற்படை விடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வழிபட்டனர்.

அதன் பிறகு திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில்‌ இருந்து அக்கட்சியினர் “வெல்லப்போறான் விவசாயி”, “ஆளப்போறான் தமிழன்” என முழக்கமிட்டு ஊர்வலமாக கையில் கரும்புடனும் தோளில் பச்சைத் துண்டுடனும்,வேட்பாளர் கையில் சேவலுடனும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் எங்கள் இறைவன் முப்பாட்டன் முருகனின் கொடியில் சேவல் உள்ளது, சேவல் சண்டையானது சல்லிக்கட்டு போல தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றமைக்கான சான்றாக சேவல் நடுகல் பல இடங்களில் கிடைத்துள்ளது.

மேலும் பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை பற்றி குறிப்புகள் உள்ளது. சேவல் சண்டை வட அமெரிக்கா, ஆசியாவின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வரும் சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்
நாம் தமிழர் ஆட்சியில் சேவல் சண்டை தமிழரின் வீர விளையாட்டாக அறிவிக்கப்படும் எனவும்,நாம் தமிழர் ஆட்சியில் ஆடு, மாடு, கோழி வளர்த்தல் அரசுப் பணி எனவும் விடியும் நேரம் அறிந்து சேவல் கூவுவதைக் கேட்டு அதிகாலையில் மக்கள் விழிப்பதைப் போல் வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விழித்துக்கொண்டு தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் சேவலுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தோம் என தெரிவித்தார்.

பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில்…

2016 முதல் 4 முறை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தலில் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக 2016 சட்டமன்றப் பொதுத்தேர்தலில அ
ஆட்டுக் கிடாயும், 2016 சட்டமன்றத் இடைத்தேர்தலில் காளைமாடும்,
2019 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கரும்பும்,
2021 சட்ட மன்ற பொதுத் தேர்தலில் சேவலுடன் வந்து நாம் தமிழர் கட்சி வேட்புமனு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!