சாத்தூரில் நடைபெறும் சாலையோர வாருகால் அமைக்கும் பணி.. விரைவுபடுத்த கோரிக்கை!

சாத்தூரில் நடைபெறும் சாலையோர வாருகால் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் பிரதான சாலை, வெம்பக்கோட்டை சாலை ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் வாருகால் அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்தப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி தொடங்கி வைத்தாா்.

இந்தப் பணிகளுக்காக மதுரை பேருந்து நிறுத்தத்திலிருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் குழிகள் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகள் ஆங்காங்கே பாதியளவில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், வாருகாலில் மழை நீா், கழிவு நீா் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

பிரதான சாலையிலும் இதேபோன்று வணிக நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் முன்பு குழிகள் தோண்டப்பட்டு, அரைகுறையாகவும் தரமில்லாமலும் வாருகால் அமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டுகின்றனா்.

சாலையோர மரங்கள், மின் கம்பங்கள் அகற்றுவதற்கான அனுமதிகளை ஒப்பந்ததாரருக்கு வழங்குவதில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாலும் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வாருகால் அமைக்கும் பணிகள் தாமதமாவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையோர வாருகால் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தி, முழுமையாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சாலையோர வாருகால் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மழை நேரம் என்பதால் தொய்வு ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைத்தால் விரைந்து முடிக்க முடியும் என்றனா்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!