“கோப்பையுடன் வாருங்கள்” – இந்திய அணிக்கு ஜெய் ஷா வாழ்த்து | T20 WC

மும்பை: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

குரூப் ஏ-வில் உள்ள இந்திய அணி, இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டியில் விளையாட உள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரின் நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை ஜெய் ஷா தெரிவித்துள்ளார். “கோப்பையை வென்று வாருங்கள். ஜெய் ஹிந்த்” என தனது சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்யவுள்ள மற்றொரு வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். இருந்தாலும் விராட் கோலி, தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டுமென பலரும் சொல்லி வருகின்றனர். அண்மையில் முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு அபாரமாக அடி ரன் குவித்தார். அதை கருத்தில் கொண்டே பலரும் அவரே இன்னிங்ஸை ஓபன் செய்ய வேண்டுமென தெரிவித்து வருகின்றனர்.

பயிற்சி ஆட்டத்தில் கோலி விளையாடவில்லை. ஜெய்ஸ்வால் அணியில் இருந்து சஞ்சு சாம்சன், ரோகித்துடன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தார். அதை வைத்து பார்க்கும் போது ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெற மாட்டார் என சொல்லப்படுகிறது.

ஆடுகளம் எப்படி? – நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மிகவும் ஸ்லோவாக உள்ளது. பெரிய அளவில் ரன் சேர்க்க பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளம் கைகொடுக்கவில்லை. கடந்த 3-ம் தேதி இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இங்கு விளையாடி இருந்தன. இலங்கை 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த இலக்கை எட்ட தென் ஆப்பிரிக்க அணி 16.2 ஓவர்களை எடுத்து கொண்டது. ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவான ரன் ரேட்டில் இரண்டு இன்னிங்ஸும் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!