தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ் வழிபாட்டு பயிற்சி – சிதம்பரம் பகுதியில் உள்ள கிராமப்புற பூசாரிகளுக்கு தமிழ் வழிபாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.
இடையன் பால்சொரி சிற்றூரில் ஆகத்து 7, 8 ஆகிய நாட்களில் சிதம்பரம் இடையன் பால் சொரி கிராமத்தில் நடைப்பெற்ற இப்பயிலரங்கில் பெராம்பட்டு, சிவக்கம், மஞ்சசுழி, திட்டுக்காட்டூர், பூங்குடி, வடமூர், மேலமூங்கிலடி, கோவிலாம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து கோயில் பூசாரிகள் பங்கேற்றனர்.
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு குழு உறுப்பினரும் சைவ ஆன்மீக செயல்பாட்டாளருமான ’மெய் கண்ட சிவம்’ இறைநெறி இமயவன் அவர்கள் பூசாரிகளுக்கு தமிழ் வழிபாட்டு பயிற்சிகளை அளித்தார்.
இப்பயிலரங்கை ஆகத்து 7 அன்று காலை தில்லை திருமுறை மன்ற அமைப்பாளரும் இந்திய ஸ்டேட் வங்கியின் ஓய்வுப்பெற்ற தலைமை மேலாளர் திரு.வி.முருகையன் அவர்கள் தொடங்கி வைத்தார். பயிற்சியின் நிறைவில் ஆகத்து 8 மாலை இன்று நடைப்பெற்ற நிறைவு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல முன்னாள் தலைவர் பேராசிரியர் ஞான. அம்பலவாணன், மணிபாரதி அச்சக உரிமையாளர் ச.மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இப்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் சான்றிதழ் வழங்கி பாராட்டுரையாற்றினார்.
பயிற்சி பெற்ற பூசாரிகளின் சார்பில் கோதண்டபாணி நன்றி உரையாற்றினார். இப்பயிலரங்கை தெய்வ தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினரும் வள்ளலார் ஆய்வாளருமான முனைவர் வே. சுப்ரமணியசிவா ஒருங்கிணைத்தார்.