குமரியில் ஓர் சபரிமலை: படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்.


குமரியின் சபரிமலை: பொட்டல்குளம் குபேர ஐய்யன் மலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு படையெடுக்கும் பிறமாவட்ட ஐயப்ப பக்தர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொட்டல்குளத்தில் 1983ஆம் ஆண்டு தியாகராஜ சுவாமிகள் தலைமையில் ஐய்யன்மலை குபேர ஐயப்ப சுவாமி கோயில் நிறுவப்பட்டு, இன்றளவும் சீரோடும் சிறப்போடும் விளங்கி வருகிறது. இந்த ஆலயம் பல்வேறு தடைகளைத் தாண்டி பல கட்ட வளர்ச்சிப் பணிகளை கண்டு, இன்று கேரள மாநிலம் சபரிமலை போல் வளர்ந்து குமரியின் சபரிமலை என இன்றளவும் பக்தர்களால் போற்றிப் புகழப்படுகிறது.
இந்த குபேர ஐய்யன் மலை ஐயப்ப சுவாமி கோவிலானது கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருப்பது போல் மலையின் மேல் ஐயப்பன் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.

மேலும் சபரிமலையில் இருப்பது போன்று பதினெட்டு படிகள், மஞ்சள் மாதா சன்னிதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளது. மேலும் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி முதல் தினசரி 3 கால பூஜையும், மண்டலபூஜை, படிபூஜை உட்பட சபரிமலையில் பின்பற்றப்படும் அனைத்து விதமான நடைமுறைகளும் இங்கே கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோயிலுக்கு செல்வது ஒரு சுற்றுலா தளத்திற்கு செல்வது போன்ற உணர்வு பக்தர்களுக்கு ஏற்படுகிறது. அதற்கு காரணம், அடர்ந்த காட்டிற்குள் உள்ள ஒரு மலையில் நடந்து செல்வது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் இயற்கையாக அமைந்துள்ளது. அது மட்டுமின்றி ஆங்காங்கே அமர்ந்து ஓய்வு எடுத்து செல்லும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். அதுமட்டுமின்றி பக்தர்கள் அமைதியான முறையில் தியானம் செய்யவும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளின் காற்றை சுவாசிக்கும் வகையிலும் ஸ்ரீ குபேர மூலிகை தியான மண்டபம் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்யலாம்.

தற்போது கொரொனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல இயலாத நிலை நீடித்து வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து ஒரு நாளைக்கு இத்தனை பேர்தான் தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை நீடித்து வருவதால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் ஆசிரமத்தில் செயல்பட்டு வரும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் குமரி மாவட்ட செயலாளர் ஆதிமணி தலைமையில் நிர்வாகிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொட்டல்குளம் குபேர அய்யன் மலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு வருகை தந்தனர். அவர்களை கோயில் நிறுவனர் தியாகராஜ சுவாமிகள் வரவேற்று தரிசனம் செய்ய அழைத்துச் சென்றார். பின்னர் அவர்கள் கூறியதாவது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருடம்தோறும் சபரி மலைக்கு செல்வதறகு முன்னர் எங்கள் சங்கத்திற்கு வந்து தங்கிச் செல்வார்கள்.

தற்போது கொரொனா நோய்த்தொற்று காரணமாக அவர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டு நிலைமையை கூறினார்கள்.
அதன்படி நாங்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறோம். கேரளா மாநிலம் சபரிமலை போன்ற அமைப்புடைய ஒரு கோயிலை தேர்வு செய்து அங்கு வைத்து சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் செய்கின்ற அனைத்து விதமான நடைமுறைகளையும் செய்வதற்கு உகந்த கோயிலை தேடி வந்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இக்கோயிலுக்கு வந்தோம். இந்த கோயிலை பார்த்தவுடன் எங்களுக்கு பூரண திருப்தி ஏற்பட்டு விட்டது. காரணம் சபரிமலையில் இருப்பது போன்று எல்லா அம்சங்களும் இங்கு நிறைந்து இருக்கிறது. இங்கே சபரிமலையில் செய்வதுபோல நெய்த் தேங்காய் உடைத்தல், சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்வது, 18படி பூஜைகள் செய்வது உள்பட பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. எனவே நாங்கள் இது குறித்து அவர்களிடம் கூறி இங்கே வர வைப்போம் என கூறினர்.

அதனைத் தொடர்ந்து குமரியின் சபரிமலை என்று அழைக்கப்படும் பொட்டல்குளம் குபேர அய்யன் மலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுவாமிகள் வந்து சபரிமலையில் செய்வதுபோல அதே நடைமுறைகளை செய்து சுவாமியை தரிசனம் செய்துவிட்டு மன நிறைவுடன் செல்கின்றனர். மேலும் இங்கு ஆன்லைன் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து குழுவில் இணையவும்.

One thought on “குமரியில் ஓர் சபரிமலை: படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்.

Leave a Reply

error: Content is protected !!