கன்னியாகுமரி: வரலாற்று சிறப்பு மிக்க வட்ட கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல பே.டி.எம் மூலம் நுழைவுகட்டணம் செலுத்தும் திட்டம் அமுல்படுத்தபட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.
கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலாதலம் வட்டகோட்டையாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கடல்வழிபாதுகாப்பை கண்காணிக்கவும்,கடல் வழியாக அன்னியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் இந்தக்கோட்டை 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கடற்கரையில் இருந்து மூன்றரை ஏக்கர் நிலபரப்பில் 25 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை கன்னியாகுமரியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கடற்படை அலுவலராக இருந்து, 1741ம் ஆண்டில் நடைபெற்ற குளச்சல் போரில் திருவிதாங்கூர் படையுடன் மோதிய டச்சுத் தளபதியான யூஸ்ட்டேசியஸ் டிலனாய் மேற்பார்வையில் கட்டப்பட்டது. காலப்போக்கில் அவர் திருவிதாங்கூர் அரசரின் நம்பிக்கைக்கு உரியவராகி திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதன் உள் கொத்தளங்களுக்குள் பீரங்கிகள் கொண்டு செல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் திருவிதாங்கூர் அரசின் சின்னமான யானைச் சிலைகள் வரவேற்கின்றன. கோட்டைக்குள் கண்காணிப்பு அறை, ஓய்வறை ஆயுதசாலை, ஆகியவையும் உள்ளன. மண்டபத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் கி.பி 12 ம் நூற்றாண்டில் இந்த கோட்டை பாண்டியர்களின் கைவசமிருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இந்தக்கோட்டையின் மூன்று பக்கங்கள் கடலுக்குள் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். இந்த கோட்டை பராமரிப்பு இந்திய தொல்பொருளியல் ஆராய்ச்சித் துறையின் கீழ் உள்ள இந்த கோட்டை அண்மையில் புனரமைப்பு செய்யப்பட்டு அழகான புல்தரை,பூங்கா போன்றவை அமைக்கப்பட்டது. அமைதியான சூழ்நிலையில், ஒருபுறம் கடல் அலைகளின் காட்சியுடனும், மற்றொரு புறம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் காட்சியுடனும் அமைந்துள்ளது. மேலும் கடற்கரை ஓரத்தில் காணப்படும் வட்டக்கோட்டைக்கு தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். கொரோனா பாதிப்புக்கு பின்னர் தற்போது சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது கோட்டைக்குள் செல்ல 25 ரூபாய் நுழைவுகட்டணத்தை
பேடிஎம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை ஆப் பில் செலுத்திய பின்னரே அனுமதிக்கபடுகின்றனர்.இதனால் கோட்டையை சுற்றிபார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக வங்கிக்கணக்கும், ஆண்டிராய்டு செல்ஃபோன் வைத்திருக்க வேண்டும். அதிலும் நெட் பேங்கிங் இருந்தால் மட்டுமே நுழைவுக்கட்டணம் கட்டி நுழைவுச்சீட்டு எடுக்க முடியும். அப்படி இதில் ஒன்று இல்லாவிட்டாலும் வட்டக்கோட்டைக்குள் செல்லமுடியாமல் வெளியில் நின்று வேடிக்கை பார்த்துசெல்லவேண்டியதுதான். இதனால் தினமும் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திருப்பி செல்கின்றனர். சிலர் அங்கு நின்றே ஆப்பை டவுன்லோடு செய்கின்றனர். இயலாதவர்கள் நீண்டநேரம் அலைகழிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
பராமரிப்பு இல்லாத பூங்கா:-
கோட்டையினுள் பூங்கா மற்றும் புல்தரைகள் அழகாக பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது எந்தவிதமான பராமரிப்பு இன்றி அலங்கோலமாக காணபடுகிறது.ஆனால் பூங்காவை பராமரிக்க போதிய பணியாளர்கள் இருந்தும் புல்கள் காய்ந்து புதர்மண்டி விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக காணப்படுகிறது.
பூட்டிகிடக்கும் கழிப்பறை :-
இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்த கழிப்பிட வசதிகள் இருந்தும் அவை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பூட்டப்பட்டு காணப்படுகிறது. மேலும் கார்பார்க்கிங் அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இருந்தும் அவற்றை தற்போது சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலமான வட்டக்கோட்டையை சம்பந்தப்பட்ட துறையினர் முன்பு போல பராமரித்து, அழகுப்படுத்தி அனைத்து வசதிகளுடனும் செயல்பட வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சுற்றுலாப்பயணிகளை அலைகழிக்கும் பேடிஎம் மூலம் நுழைவு சீட்டு எடுக்கும் முறையை ரத்து செய்து பூட்டிக்கிடக்கும் நுழைவு சீட்டு கொடுக்கும் அலுவலகத்தை திறந்து அதன் வழியாக நுழைவுச்சீட்டு கொடுக்க வேண்டும் எனவும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.