திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர் மழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலையில் கொட்டி விவசாயிகள் வேதனை – உரிய இழப்பீடு தர வேண்டி கோரிக்கை.

Advertising

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் பெருங்குடி அருகேயுள்ள சின்னஉடைப்பு பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரி முறையில் மூன்று மாத பயிரான சின்ன வெங்காயத்தை புரட்டாசி மாதத்தில் பயிரிட்டு கார்த்திகையில் மகசூல் கிடைக்குமென எதிர்பார்த்திருந்து, அறுவடை செய்யும் தருவாயில் மதுரை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதிகளில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்து வரும் தொடர் கனமழையால் சின்ன வெங்காயம் செடியிலேயே அழுகி வீணாகி போனதால் செடிகளை பிடிங்கி சாலையில் கொட்டி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அழுகி வீணாகி போன வெங்காயம்

விதை, உரம், பராமரிப்பு செலவுகள் என ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் வரையில் செலவு செய்த நிலையில், தற்போது அதீத மழையால் செடியிலேயே அழுகி போனதால் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து நான்கு மாத பயிரான நிலக்கடலையை கார்த்திகையில் பயிரிட்டு மாசியில் அறுவடை செய்யவேண்டும்.

இந்தநிலையில் சின்ன வெங்காயத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதால் அடுத்து கார்த்திகையில் நிலக்கடலையை பயிர் செய்வதற்க்கு செலவு செய்ய வழி இல்லாமல் நிலத்தை அப்படியே போட்டுவிட போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே அரசு உடனே சேதத்தை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

error: Content is protected !!