ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்திரா நகர்,லீலாவதி நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கட்டிடத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை இந்த பகுதியில் வருவதால் பெண்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்காது. அருகிலேயே பெருமாள் கோவில் உள்ளது. பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த பாதையை கடந்துதான் செல்ல வேண்டும். எனவே டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று தெரிவித்தனர். இதையும் மீறி திறக்கப்பட்டால் கடையை அடித்து நொறுக்குவோம் என எச்சரித்துவிட்டு சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.