மலைகளின் இளவரசி’யான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக நகரில் உள்ள சுற்றுலா இடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இருப்பினும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் இருசக்கர வாகனங்கள், கார், சுற்றுலா வேன்களில் வந்தனர். படகு சவாரி உள்ளிட்ட எந்த சுற்றுலா தளத்திற்கும் அனுமதி வழங்காததால் வாகனங்கள் அந்தந்த பகுதிக்கு செல்லாததால் கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி அருவி முதல் நகரப்பகுதி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கொடைக்கானல்
இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் உத்தரவின்பேரில் வெள்ளி அருவி பகுதியில் உள்ள 2 வழிகளும் திறக்கப்பட்டன. ஆனால் போக்குவரத்து ஓரளவு குறைந்த போதிலும் நகர்ப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து நகரில் போக்குவரத்து சீரானது.

குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயில்
பிரையண்ட் பூங்கா, தூண்பாறை, குணா குகை, பைன்பாரஸ்ட், ஏரியில் படகு சவாரி என சுற்றுலாத் தலங்களை தடை செய்ததால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பொழுதை கழிக்க முடியாமல் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவற்றின் அழகை தூரத்தில் நின்று மட்டுமே பார்த்து ரசித்துவிட்டு சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தங்கள் பொழுதை கழிக்க கொடைக்கானலின் மேல்மலைப் பகுதியான பூம்பாறை, மன்வைனூர், கவுஞ்சி, கூக்கால் மலை கிராமப்பகுதிக்கு படை எடுத்து செல்றனர்.

பூம்பாறை மலைக்கிராமம்
கொடைக்கானலின் சர்வ தேச சுற்றுலா தளமான மன்னவனூரில் உள்ள ஆட்டுப்பண்ணை, முயல் பண்ணை, சூழல் சுற்றுலா மற்றும் கூக்கால் ஏரி உள்ளிட்டவற்றிற்கும் அனுமதி வழங்கப்படாததால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மன்னவனூர் மலைக்கிராமம்

கவுஞ்சி மலைக்கிராமம்
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் நகரில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்து ஹோட்டல்களில் உணவின்றியும் தவித்தனர். அதேபோல் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூக்கால் மலைக்கிராமம்
சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் அனைவரும் விரும்புவதால் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Supper