
இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கணை பி.டி.உஷா, திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் (இயக்குநர் ராஜமவுலியின் தந்தை) சமூக செயற்பாட்டாளர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்துள்ளார்.
இசைஞானி இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த இளையராஜா உயர்ந்து சாதித்தது அதிகம். தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர் இளையராஜா, அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன என்று எம்.பி.யாக தேர்வாகியுள்ள இளையராஜாவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.“ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள #இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர். பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா அவர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் உங்கள் இசை பெருமையை கௌரவிக்க பதவி கொடுத்தால் கூட சகித்துக் கொள்ளலாம்..ஆனால் சங்கிகள் உங்களை தலித்தாக பார்த்து எம்.பி பதவி கொடுக்கிறார்கள் என்பதை அறியும்போது வருத்தமாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது..
தமிழர்கள் நாங்கள் உங்களை இசை அரசராக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்..தமிழினத்தின் பெருமைமிகு தொல்குடி சமூகத்தைச் சேர்ந்த நீங்கள் தலித் அல்ல.. நீங்கள் ராஜா.. இசையின் ராஜா..
உங்களை தலித் என்று ஒரு கட்டுரையில் குறிபிட்டுவிட்ட பாடகர் கே.ஏ.குணசேகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அதே சுயமரியாதைக்கார இளையராஜாவாக நிமிர்ந்து நில்லுங்கள்..
இந்த எம்பி பதவி மட்டுமல்ல.. ஜனாதிபதி பதவி கொடுத்தாலும் கூட அது உங்கள் பெருமைக்கும் தகுதிக்குமானது அல்ல..இந்த பிச்சாத்து எம்பி பதவி அறிவிப்பை நீங்கள் தூக்கி குப்பைக் கூடையில் வீசி எறிய வேண்டும் என்பது உங்கள் ரசிகனாக எங்கள் வேண்டுகோள் என எழுத்தாளரும் ஓவியருமான கார்ட்டூனிஸ்ட் பாலா பதிவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.