
அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த நாம் தமிழர் கட்சி!
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், நாதக எப்போதும் போல தனித்தே களம் கண்டது.
2016 முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 7% வாக்குகளைப் பெற்றது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு குறைந்தது 8% வாக்குகள் அவசியம். அதனை இந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்று அங்கீகாரத்தைப் பெற முயன்று வருகின்றனர். ஆனால், விவசாயி சின்னம் இல்லாதது அவர்களுக்கு பாதகமாக பார்க்கப்படும் நிலையில், கொடுத்த மைக் சின்னத்தை ஓரளவுக்கு வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தது நாம் தமிழர் கட்சி.
பிரச்சார மேடைகளில் பேசிய சீமான், “தமிழ்நாட்டில் மிகவும் வலிமையான கூட்டணி என்றால் அது எங்களுடையதுதான். நாங்கள் மக்களோடு கூட்டணி வைக்கிறோம். வாக்கு சதவீதம் உயரும்” என்று பேசினார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் கூறும் நிலவரப்படி, கன்னியாகுமரி, நாகை, திருச்சி, புதுச்சேரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருந்து வருகிறது. பெரும்பான்மையான இடங்களில் 4-வது இடத்தில் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு தொகுதியிலும் வெற்றி நிலவரம் காணப்படாவிட்டாலும், வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நகர்வுகளை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் தற்போது வரை நாதக 8% வாக்குகள் வாங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மாநில அந்தஸ்து பெற்ற கட்சியாக நாதக உருவெடுத்துள்ளது. பல தொகுதிகளில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி 3ஆவது, 4ஆவது இடங்களை அக்கட்சி பிடித்துள்ளது. குறிப்பாக பாஜக, அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டிய வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு சென்றதால் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.