
சபரிமலையில் மண்டல பூஜையின் உச்ச நிகழ்வாக இன்று (டிசம்பர். 27) ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதற்காக ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16-ம் தேதி மண்டல வழிபாட்டுக்காக நடைதிறக்கப்பட்டது. 41 நாள் வழிபாட்டின் உச்ச நிகழ்வாக இன்று மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி, சுவாமிக்கு 420 பவுன் எடையிலான தங்கக் கவச அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடந்த 23-ம்3-ம் தேதி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. நேற்று மதியம் பம்பையை வந்தடைந்த தங்க அங்கி, பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பின்னர் தலைச்சுமையாக நீலிமலை வழியாக கொண்டு செல்லப்பட்ட தங்க அங்கிக்கு, தேவசம் போர்டு சார்பில் சரங்குத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் தங்க அங்கியை தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து 18-ம் படி வழியே கொண்டு செல்லப்பட்டு, மாலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு 10.45 மணி வரை ஏராளமான பக்தர்கள் தங்கத்தில் ஜொலித்த ஐயப்பனை தரிசனம் செய்தனர். பின்பு அங்கி அகற்றப்பட்டு டிச.26 இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று டிச.27 நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகளுடன் காலை 10.10 மணிக்கு தொடங்கப்பட்ட மண்டல பூஜை நிகழ்வானது, 10.30 மணி அளவில் சந்தன கலசத்தினை மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி, மேளதாளம் இசை முழங்க கோவில் பிரகாரம் சுற்றி வந்து சுவாமிக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்று மகர பூஜை வழிபாடு நிறைவடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையுடன், சனிக்கிழமை விடுமுறை என்பதால் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எண்ணப்பட்டு வந்த நிலையில் 2000 க்கும் குறைவான பக்தர்களே மண்டல பூஜையில் சமயத்தில் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நடைபந்தல், சன்னிதானம் பகுதியிலும் கோவில் பிரகார வரிசையில் பக்தர்களின்றி வெறிச்சோடியாக காணப்பட்டது. மேலும் இன்று இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும் எனவும், இத்துடன் டிசம்பர் 28, 29-ம் தேதிகளில் சந்நிதானம் சுத்தம் செய்யப்பட்டு, மகர வழிபாட்டுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்படும் என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.