திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை திருவிழாவும் ஒன்று.

பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கொடியேற்றம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் மாவிலை, தர்ப்பைப்புல், பூமாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

விழாவினை ஒட்டி சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் சுவாமி காலையிலும், மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கார்த்திகை 2ம் நாள் நவம்பர்18-ம் தேதி மாலை 7 மணி அளவில் பட்டாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து கார்த்திகை 3ம் நாள் நவம்பர் 19-ம் தேதி மாலையில் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது உச்சி பிள்ளையார் கோயிலில் மகாதீபம் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!