ரஷ்யாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது காண்போரை அச்சத்திலும் உறைய வைக்கிறது. இதற்கு காரணம் பெண் ஒருவரின் வாயில் இருந்து மருத்துவர்கள் 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்றை வெளியே எடுக்கின்றனர்.
தகெஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்தவுடன் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அதனால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு குமட்டல், வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை தெரிந்து கொண்டனர்.
அதன்பிறகு அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மருத்துவர்கள் பரிசோதித்தனர். அதில் 4 அடி நீள பாம்பு ஒன்றை வாய் வழியாக வெளியே எடுத்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதனை வெளியே எடுக்கும் போது மருத்துவர்களின் முகத்திலும் ஒரு பயம் இருக்கிறது. ஆனால் பாம்பு உயிருடன் இருந்ததா என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.
அந்த பாம்பு எந்த வகையைச் சேர்ந்தது என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்தப் பெண் வசிக்கும் இடம் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் பாம்புகள் அதிகம் இருக்கும். இருப்பினும் இந்த விநோத சம்பவம் கிராம மக்கள் மட்டுமல்லாமல், பலரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. அதனால் யாரும் திறந்தவெளியில் படுக்க வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.