எதிர்க்கட்சித் தலைவராக ஈ.பி.எஸ் தேர்வு – கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓ.பி.எஸ்…மீண்டும் தர்மயுத்தத்திற்கு தயாராகிறதா தமிழகம்.?

சென்னை,: அதிமுகவில் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், அக்கட்சி தலைமை அலுவலகத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சென்னை திரும்பிய சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டிடிவி.தினகரனின் நடவடிக்கைகளால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றிபெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதேபோல், அதிமுக கூட்டணி தமிழகத்தில் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக மட்டும் 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக பெற்றுள்ளது. இதையடுத்து அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் அதிமுகவினர் இடையே இழுபறி நீடித்து வருகிறது. கடந்த 7ம் தேதி எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த அக்கட்சியின் எல்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, தேர்தல் தோல்விக்கு எடப்பாடி தான் காரணம். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அவர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளால் தான் அதிமுக தோல்வியை தழுவியது என ஓபிஎஸ் நேரடி குற்றச்சாட்டை வைத்தார்.

இதேபோல், கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திக்கொண்டார். ஆனால், அதை ஏற்றுக்கொண்டேன். தற்போது தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளதால் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நானே முடிவு எடுப்பேன் என எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கறாராக ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். ஆனால், இதை எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் நாங்கள் தனித்து செயல்படும் நிலை ஏற்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர்.

இதனால் எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் மூத்த நிர்வாகிகள் இடையே குழப்பம் நீடித்து வருகிறது. இதேபோல், ஓ.பன்னீர் செல்வத்தின் கறாரான பேச்சுக்கு பின்னால் சசிகலா இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்தநிலையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எதிரே சசிகலாவை ஆதரித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில்,

“துரோகிகளை துவம்சம் செய்ய தூய உள்ளமே வருக..பொறுமை போதும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரே தலைமையேற்க வருக… வருக இப்படிக்கு அதிமுக உண்மை தொண்டர்கள்”

என குறிப்பிடப்பட்டிருந்தது. தலைமை அலுவலகத்தை தொடர்ந்து கன்னியாகுமரி, புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதிமுகவில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் மீண்டும் நடைபெற்றது.

கடந்த 3 மணிநேரமாக நடைபெற்ற கூட்டம் தற்போது நிறைவுபெற்றது. கூட்டத்தின் முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவை அடுத்து, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்துக்கு வெளியே உற்சாகமாக அவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இம்முடிவால் ஓபிஎஸ் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படும் நிலையில், கூட்டம் முடிந்தபின் கோபத்தில் வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!