வெளிப்பைடையான நிர்வாகம்…இளம் ஊராட்சித் தலைவருக்கு குவியும் பாராட்டு.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வரவு, செலவுக் கணக்கை வெளியிட்ட இளம் ஊராட்சித் தலைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

திருப்பத்தூர் அருகேயுள்ளது சேவினிப்பட்டி ஊராட்சி. இதில் சேவினிப்பட்டி, சந்திரன்பட்டி, கல்லங்குத்து, பொட்டப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. சந்திரன்பட்டியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரியான சேவற்கொடியோன் (32), சிங்கப்பூரில் நிறுவனம் நடத்தி வந்தார். பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி வந்த அவருக்கு விவசாயம், சமூக செயல்கள் மீது ஈடுபாடு வந்தது.

இதையடுத்து ஊருக்குத் திரும்பிய அவர் விவசாயம் செய்யத் தொடங்கினார். அத்தோடு பால் பண்ணையும் நடத்தி வருகிறார். மேலும் அவர் 2019 டிசம்பரில் நடந்த ஊராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இளம் ஊராட்சித் தலைவரான இவர் வெளிப்படைத் தன்மையுடன் நிர்வாகம் செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தார்.

மேலும் மக்கள் குறைகளைப் பட்டியலிட்டு முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றி வருகிறார். அந்த அடிப்படையில் அவர் சேவினிப்பட்டி, சந்திரன்பட்டி ஆகிய கிராமங்களில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாகச் சுகாதார வளாகங்களைக் கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் அங்கன்வாடி மையம், ஆதி திராவிடர் மக்களுக்குச் சாலை வசதியும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

சேவினிப்பட்டி ஊராட்சியின் வரவு, செலவுக் கணக்கு.
பதவியேற்று ஓராண்டு முடிந்த நிலையில் தற்போது ஊராட்சியின் வரவு- செலவுக் கணக்குகளை வெளியிட்டுள்ளார். மேலும் அவற்றை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். வரவு, செலவு கணக்குக் கேட்டாலே கோபப்படும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் சேவற்கொடியோனுக்கு பாராட்டுக் குவிந்து வருகிறது.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் சேவற்கொடியோன் கூறுகையில், ”மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சிங்கப்பூரில் நடத்தி வந்த நிறுவனத்தை விட்டுவிட்டு ஊருக்கு வந்தேன். அதனால் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறேன். ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகின்றனர். அவர்களும் என்னைப் பார்த்து கணக்குகளை வெளியிடுவர். இதன்மூலம் மற்றவர்களும் மாற வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!