கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவி வந்து கொண்டிருக்கும் சூழலில் திமுக அரசு மது கடையை திறந்து இருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று முதல் அலையின் போது அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது திமுக எதிர்க்கட்சியாக இருந்த நிலையில் அதிமுக அரசு மதுக் கடையை திறந்தபோது கொரோனா காலத்தில் மதுக்கடை திறந்ததை கண்டித்து வீட்டு வாசல் பதாகை ஏந்தி போராடினார் ஸ்டாலின். தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 30 நாட்களுக்கு மேலாக மது கடையை திறக்கவில்லை. கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலையிலிருந்து மூன்றாம் அலை பரவும் நிலை உள்ளது என எச்சரிக்கை விடுத்த நிலையில் மதுக்கடையை திறக்க அனுமதி அளித்தது திமுக அரசு,இதையடுத்து அரசியல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் திமுக அரசை நோக்கி கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் அவர்களின் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மதுபான கடையை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு “அதிமுக நடத்தினால் மதுக்கடை…திமுக நடத்தினால் மருந்து கடையா…?” “மதுவில் வருமானம்… நாட்டுக்கு அவமானம்…” எனக் கண்டன முழக்கங்களை எழுப்பி, பதாகை ஏந்தி போராடினர் இதைத்தொடர்ந்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் உட்பட 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்டன அறிக்கை: மதுபானக் கடைகளை மூடக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் போராடிய நாம் தமிழர் கட்சியினர் 120 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருப்பது மக்கள் விரோத அரசியல் போக்காகும்! கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள இப்பேரிடர் காலத்தில் மதுபானக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி வெற்றிக்குமரன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் போராடிய பெண்கள் உட்பட நாம் தமிழர் உறவுகள் 120 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இத்தகைய அடக்குமுறைகள் மூலம் மண்ணுக்கும் மக்களுக்குமானப் போராட்டக் களத்தில் ஓங்கி ஒலிக்கும் நாம் தமிழர் உறவுகளின் குரலைக் முடக்கிவிடலாம் எனும் திமுக அரசின் வெறுங்கனவு ஒருபோதும் நிறைவேறாது. கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொரோனா பரவலைக் காரணம்காட்டி, மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்துப் போராடிய ஸ்டாலின் அவர்கள், தற்போது முதல்வரானதும் அதிமுக-வின் அடியொற்றி மதுபானக் கடைகள் திறப்பதும், அதற்கு எதிராகப் போராடிய நாம் தமிழர் உறவுகள் மீதும் பொய் வழக்குத் தொடுப்பதும் மக்கள் விரோத அரசியல் போக்காகும். மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை அனைவரையும் ஏற்க செய்யும் பொருட்டு அறவழியில் போராடுபவர்கள் மீது வழக்கு தொடுத்து அச்சுறுத்தி அடக்குமுறைக்குள்ளாக்குவது சனநாயகத்திற்கு எதிரானது. ஆகவே, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி போராடிய நாம் தமிழர் உறவுகள் 120 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும் மதுபானக்கடைகளின் திறப்பிற்கு எதிராக நாடெங்கிலும் எழுந்திருக்கும் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொண்டு, கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரும்வரையாவது மதுபானக்கடைகள் திறக்கும் முடிவைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


