தமிழகத்தில் மனித உரிமை தடையை நீக்க வேண்டும்; செங்கை பத்மநாபன் வலியுறுத்தல்.

1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழு மனித உரிமை பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தது. இதற்காக அமெரிக்க அதிபரின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை ஐநா சபையில் சமர்ப்பித்தது. இந்தப் பிரகடனத்துக்கு 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐநா சபையில் 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கின. இந்த நாள்தான் 1950ம் ஆண்டு முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இனம், நிறம், பால், மொழி, ஜாதி, மதம், அரசியல், பிறப்பு, சொத்து என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த தினத்தை கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும். மனித உரிமை மீறல் குறித்த புகார்களை அளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்களுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைய வழி புகார் தெரிவிக்கும் முறை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையத்தின் உடனடி சேவையைப் பெறுவதற்கு 14433 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.
அதேவேளையில் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மனித உரிமை இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் இயங்கி வரும் வேளையில் தமிழ்நாட்டில் மட்டும் மனித உரிமை இயங்கங்கள் செயல்பட அனுமதி அளிக்காதது ஏன்..? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மனித உரிமை தடையை நீக்க வேண்டும் என செங்கை பத்மநாபன் வலியுறுத்தியுள்ளார்.

திராவிட மனித சங்கிலி இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் செங்கை பத்மநாபன் அறிக்கை:

நமது நாட்டில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மனித உரிமை அமைப்புகளும், இயக்கங்களும் சிறப்பாக செயல்பட அனுமதிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சில ஆண்டுகளுக்கு முன் மனித உரிமை என்ற பெயர் கொண்ட அனைத்து இயக்கங்களும், அமைப்புகளும் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி மனித உரிமை என்ற சொல்லின் பயன்பாட்டை தடை செய்யப்பட்டுள்ளது.இந்தத் தடையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உணர்ந்து மனித உரிமை மீதான தடையை நீக்க வேண்டும். தேவைப்பட்டால் துஷ்பிரயோகம் செய்யும் இயக்கத்தை தடை செய்யலாம் அல்லது தவறு செய்யும் தனிநபரை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, ஒட்டுமொத்த மனித உரிமைக்கும் தடை என்பது, மனித உரிமைகளுக்கு எதிரான செயல்பாடு என்கிற அடிப்படையில் இத்தடையை நீக்க திராவிட மனிதச் சங்கிலி இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறேன் என இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இது போன்ற செய்திகளைஉடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையும்.

Leave a Reply

error: Content is protected !!