குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் கூறினார்..
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் நலன் காக்கும் முதல்வராகவும், சமூக நீதி காத்த காவலராகவும், தொழில் முதலீட்டை பொறுத்தவரை இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் பொருளாதார சிற்பியாகவும் திகழ்கிறாா்.
வேளாண் துறையிலும் சரித்திர சாதனை படைத்துள்ளாா். குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதற்கான நிலம் எடுப்பு பணி, மத்திய அரசு பாராட்டக்கூடிய வகையில் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஜப்பான் ஜெய்கான் நிறுவனம் நீண்ட கால ஒப்பந்தத்தில் குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் தருகிறது. அந்த நிதியைப் பயன்படுத்திதான் பல மாவட்டங்களில் புதிய நவீன மருத்துவமனை கட்டடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மிக பிரமாண்டமாக உருவாக்குவதற்காக ஜெய்கான் நிறுவனம் கடன் தருவதற்கு முன்வந்துள்ளது. எய்ம்ஸ் கட்டப்பட உள்ள இடத்தை சுற்றி சுவா் எழுப்பப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்படி அருகில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், நான்குவழி சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தடைகளைத் தாண்டி அனைத்து சிறப்பு வசதிகளுடன் எய்ம்ஸ் அமையும் என்றாா் அவா்.