தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு வருவதற்கும், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்வதற்கும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், இயற்கை வழி வாழ்வியலாளர்கள் தொடர்ந்து எதிர்க்குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், இயற்கை வழி வாழ்வியலாளர்கள் என்ற அமைப்பின் சார்பில், கட்டாய தடுப்பூசிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.இதையடுத்து நேற்று மதியம் சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயற்கைவழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டாய தடுப்பூசி கூடாது என்றும் விரும்புவோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மதியம் 2.30 மணியளவில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் அணிவகுத்து நின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் இதில் பங்கேற்க வந்த 30 பேரை காவல்துறையினர் கைதுசெய்து கொண்டு சென்றனர். இதனைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் அதே இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டனர்.
இயற்கைவழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு சுதாகர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சீர்காழி நகரச் செயலாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார். ததேபே தலைமை செயற்குழு உறுப்பினர் – செந்தமிழ் இயற்கை வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைப்பாளர் க. முருகன் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார்.
நிகழ்வில் சித்த மருத்துவர் தணிகாசலம், தமிழ்ப் பேரரசுக் கட்சித் இயக்குனர் கௌதமன், மருத்துவர் கோ. பிரேமா, சுதந்திர தமிழகம் இயக்க மருத்துவர் ரோஸ், மெய்ஞ்ஞான குடில் வாழ்வியல் மைய ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஞான சுந்தரபாண்டியன், கிட்டு ஐயா மரபு வாழ்வியல் பொறுப்பாளர் திரு கி காசிராமன், தமிழர் வணிகக்களம் மேகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறியாளர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பெண்ணாடம் மணிமாறன், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் ஆ. குபேரன், சிதம்பரம் நகரச் செயலாளர் எல்லாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக்குழுவின் பறையாட்டம் நடைபெற்றது.

அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கட்டாய தடுப்பூசிக்கு எதிராகவும் சட்டத்துக்கு முரணான ஒற்றை மருத்துவ முறை திணிப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். ஏற்கனவே கைது செய்தவர்களை வாகனத்தில் அழைத்து வந்து காவல் துறையினர் போராட்டக்களத்தில் விட்ட பொழுது ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரித்தது.
சட்டத்திற்கு முரணான கட்டாய தடுப்பூசி செலுத்தினால் தான் பொது இடங்களுக்கு செல்லமுடியும்,ரேஷன் பொருள்கைளை பெற முடியும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் இல்லையெனில் தமிழகம் முழுவதும் மக்கள் திரள் போராட்டங்கள் வலுப்படும் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி செய்தனர்.