புதுக்கோட்டை: வேங்கை வயல் கிராம குடிநீர்த் தொட்டி விவகாரம்… நேரில் சென்ற சீமான்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை நேரில் ஆய்வு செய்து குடிநீரில் மலம் கலந்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அங்கே திரண்டனர். அடுத்தடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உட்பட அதிகாரிகள் விசாரணை செய்து 11 பேர்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்தனர்.

பரிசோதனை:

அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பட்டியலின மக்களிடம் பேசிய பிறகு மாற்றுக் குடிநீர்த் தொட்டி, தண்ணீர் குழாய்கள் அமைக்கப்படும் என்றார். உடனடியாக தண்ணீர் குழாய் அமைத்து மற்றொரு தண்ணீர் தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தண்ணீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் மற்றும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு கடந்த 6ந் தேதி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பயன்பாட்டில் இருந்த செல்போன்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகிறது.சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் முதலில் கிராமத்திற்குச் சென்று நேரில் விசாரணை செய்த பிறகு முதற்கட்டமாக 7 பேருக்கு சம்மன் அனுப்பி வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்துள்ளனர். ஐந்து மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 70 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இன்னும் சிலருக்கு சம்மன் தயாராக உள்ளது. மேலும் சம்பவம் நடந்த நாளில் ஊரிலிருந்து தற்போது வெளியூர் சென்றுள்ள நபர்களுக்கும் விசாரணைக்காக சம்மன் அனுப்ப விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.15 நாட்கள் கடந்தும் குடி தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் பொதுமக்களிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் இருந்து வருகிறது. விரைவில் அதற்கான தகவல் கிடைக்கும் என்கிறார்கள் போலீசார்.

.

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சியேயாகும்!

வேங்கைவயலில் ஆதித்தமிழ்க்குடிகள் மீதான தீண்டாமைக்கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி, வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டத்திற்குரியது.தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை புரிந்த குற்றாவாளிகளைகூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தமிழ்நாட்டு காவல்துறை திறனற்றதாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.துப்பறிய கடினமான அரிதான கொடுங்குற்ற வழக்குகளை மட்டும், விரைந்து விசாரணை நடைபெற வேண்டி குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றிய நிலைமாறி, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, மக்களின் மனக்கொந்தளிப்பை அடக்கும் வகையில் உணர்வுப்பூர்வமான வழக்குகள் அனைத்தையும் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி கிடப்பில் போடுவதென்பது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிவேண்டி மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியவுடன், போராட்ட எழுச்சியை மட்டுப்படுத்துவதற்காக வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. ஆனால் இன்றுவரை மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு கிடைத்த நீதியென்ன? வழக்கின் நிலையென்ன? விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? எதுவுமில்லை. அதைப்போலவே தற்போது வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினையும், கிடப்பில் போட்டு குற்றவாளிகளை தப்புவிக்க செய்யும் முயற்சியே வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாகும்.தங்களால் கண்டறிய முடியவில்லை என்று ஒப்புக்கொள்ளும் வகையில், காவல்துறை ஆணையரே வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றுவதாக கூறுவது, காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலைமைச்சர் அவர்களின் நிர்வாகத்திறனுக்கு ஏற்பட்ட அவமானமில்லையா? தலைகுனிவில்லையா? முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?எதற்கெடுத்தாலும் குழு அமைக்கும் திமுக அரசு அமைத்த சமூகநீதி கண்காணிப்பு குழு வேங்கைவயல் கிராமத்தில் செய்த விசாரணை என்ன? நடத்திய ஆய்வு என்ன? கொடுத்த அறிக்கை என்ன? அதன்பெயரில் எடுத்த நடவடிக்கை என்ன? இதுதான் 60 ஆண்டுகாலமாக திராவிடம் தமிழர் மண்ணில் கட்டிக்காத்த சமூகநீதியா?ஆதித்தமிழ் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மலத்தினை கலந்து தீண்டாமை வன்கொடுமை புரிந்த சமூகவிரோதிகளைக்கூட கைது செய்ய முடியாத திறனற்ற திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு என்றுதான் இனி அழைக்க வேண்டும்.ஆகவே, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை என்ற பெயரில் வேங்கைவயல் தீண்டாமைக்கொடுமை வழக்கினை தமிழ்நாடு அரசு மேலும், மேலும் காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனதுஅறிக்கையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட கிராம மக்களை நேரில் சென்று சீமான் ஆறுதல் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!