ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்குவது எங்கிருந்து தோன்றியது? முதலில் பல்லக்கை பயன்படுத்தியது யார்?ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதை தடை செய்ய முடியாது… எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை!
தருமபுரம் ஆதினம் ஆதீன கர்த்தாக்களுக்கு பல்லக்கு தூக்கும் முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது எங்கிருந்து தோன்றியது, முதன்முதலில் பல்லக்கை பயன்படுத்தியது யார்?சிவபெருமானை முழுமுதற்கடவுளாக முன்னிறுத்தி வழிபடுவது சைவ சமயம். சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படையாக விளங்குவது ஆகமங்களும், வேதங்களும். இவற்றை கற்றுக் கொடுப்பதற்கும், சைவ சமயத்தை வளர்ப்பதற்கும் உருவாக்கப்பட்டதே ஆதீனங்கள்.
அத்துடன் கோயில்களை நிர்வகிப்பதும், அதன் சொத்துகளை பராமரிப்பதும் ஆதீனங்களின் அறப்பணி. ஆதீனத்தின் ஆதிகால பெயர் மடங்களே. உரிமை என்ற பொருள் தரும் சமஸ்கிருத சொல்லே ஆதீனம்.சைவ சமயத்தை வளர்க்க அரசர்கள் முதல் அன்றாட கூலிகள் வரை கொடுத்த அறக்கொடைகள் மூலம் உருவாக்கப்பட்டதே ஆதீனங்கள். தமிழ்நாட்டில் அந்தந்த மடங்கள் அமைந்துள்ள இடங்களின் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகின்றன ஆதீனங்கள். மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் என தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்களின் எண்ணிக்கை 56.முதன்முதலில் ஆதீனத்தை தோற்றுவித்தவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர்.
மூன்று வயதிலேயே தெய்வக்களையுடன் தெவிட்டாத தேனமுது பாடல்களால் சிவனை பூசித்தவர் திருஞானசம்பந்தர். 5ஆம் நூறாண்டில் வாழ்ந்த அவர், மதுரை ஆதீனத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர் கூன் பாண்டிய மன்னன். சைவத்தையும் தமிழையும் மதுரையில் நிலைநாட்டிய திருஞானசம்பந்தரின் வழியில் திருவாவடுதுறை, தருமபுரம், காஞ்சி என ஆங்காங்கே தோற்றுவிக்கப்பட்டன ஆதீனங்கள்இந்த ஆதீனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், ஏராளமான கோயில்களும் உரிமை. சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை கோயில் பராமரிப்புக்கும், சைவ சமய வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே விதி. சைவ சமயத்தை வளர்ப்பதற்காக ஏற்பட்ட சைவ மடங்கள், தமிழ் வளர்ச்சிக்கு செய்த பங்கு அளப்பரியது. மடங்களில் தங்கி பலருக்கும் தமிழ் நூல்களை கற்பித்த புலவர்கள் ஏராளம். திருவாவடுதுறை, தருமபுரம் தொடங்கி பல மடங்களில் வாழ்ந்த புலவர்கள் இயற்றிய நூல்கள் பல இலக்கிய வாழ்வு கொண்டவை. திருஞானசம்பந்தரை பின்பற்றி தமிழ் இலக்கியங்களில் கவனம் செலுத்திய ஆதீன கர்த்தாக்கள், அவ்வாறே பின்பற்றியதுதான் பல்லக்கு முறை. சிறு வயது முதல் பதிகங்களைப் பாடி பல்வேறு ஊர்களைச் சுற்றிவந்தார் திருஞானசம்பந்தர். அவருக்கு, கடலூர் மாவட்டம் திருவரத்துறை பகுதி மக்கள் கொடுத்த அன்பு பரிசு பல்லக்கு. அன்று முதல் பல்லக்கை பயன்படுத்தியே பயணங்களை மேற்கொண்டார் திருஞானசம்பந்தர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் விழாவை மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்தார். இதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குருவை சிஷ்யர்கள் சுமப்பது என்ன தவறு என பலர் பதிலுக்கு கேட்கின்றனர்.இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம. அருண் சுவாமிநாதன் கூறியதாவது:
பல்லக்கை சுமந்து செல்வது அடிமைத்தனம் என்று கூறிவரும் தி.க வினர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் காலங்காலமாக நடக்கும் மதிப்புமிகு தருமபுர ஆதீனம் அவர்களின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி வருவாய் கோட்டாட்சியர் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23-ன் கீழ் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 என்னவென்றால், “Traffic in human beings and beggar and other similar forms of forced labour are prohibited and any contravention of this provision shall be an offence punishable in accordance with law”. என மேற்படி சட்டப் பிரிவை படிக்கும் போது, ‘மனிதர்களை கடத்துவதும், கொத்தடிமை மனிதர்களை பணியில் வைத்தலும் குற்றம் கூறுகிறது.
பட்டினப் பிரவேசத்தில் கொத்தடிமைகள் ஈடுபடுகிறார்களா? Forced labour மூலம் ஆதீனகர்த்தரை தூக்கி சென்றால் அது குற்றமாக கொள்ளலாம். சீடர்கள், தம்பிரான்கள், ஆதீன கர்த்தர் அவர்களை ஆசானாக ஏற்றுக்கொண்ட மெய்யன்பர்கள் தாமாக முன்வந்து பல்லக்கில் பிரவேசிக்க வைப்பது கொத்தடிமைகள் என்ற பொருளில் வருமா??
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இல், other similar forms of forced labour என்றே உள்ளது. இந்த வைபவத்தில் forced labour எவரும் இல்லை. இருப்பினும் அதே அரசியலமைப்பு சட்டம் பிரிவு 26(b)-ன் படி to manage Its own affairs in matters of religion; எனும் வகையில் மத சம்மந்தமான தனது தனிப்பட்ட விவகாரங்களை கவனித்து கொள்ள உரிமை அளிப்பட்டுள்ளதால், சைவ சமயத்தை சார்ந்த மட நிகழ்வில் கோட்டாட்சியர் தலையிட எவ்வித அதிகாரமுமில்லை.
ஒருவேளை இந்து மதத்தை வெளிப்படையாக வெறுக்கும் திமுகவினர்,திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தாலும், பிரச்சனை செய்ய முன் வந்தாலும் அவர்கள் மீது தான் கோட்டாட்சியர் CRPC படி நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர பல நூற்றாண்டுகளாக நடைபெறும் ஒரு வழக்கத்தை தடை செய்ய வருவாய் துறைக்கோ, காவல் துறைக்கோ எவ்வித அதிகாரமுமில்லை என்று அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.