“குற்ற வழக்குகள் குறைந்து உரிமையியல் வழக்குகள் கூட வேண்டும்” – நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு @ சென்னை

நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்

சென்னை: “குற்ற வழக்குகள் குறைந்து, உரிமையியல் வழக்குகள் அதிகரிக்க வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறியுள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான 10 பங்களாக்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பழைய சட்டக் கல்லூரி அருகே 5 மாடிகளுடன் கூடிய நீதிமன்ற கட்டிடம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், கீழமை நீதித்துறை ஊழியர்களுக்கான உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிவாரண நிதி திட்ட தொடக்க விழாவும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கலையரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

இந்த விழாவில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியது: “அனைவருடைய வாழ்விலும் ஓய்வு என்பது கட்டாயம் உண்டு. இங்கு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் கங்காபுர்வாலா நாளையுடன் (மே 23) பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் அவருக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக இதைப் பார்க்கிறேன். நீதித் துறையைப் பொறுத்தமட்டில் குற்ற வழக்குகள் குறைக்கப்பட வேண்டும். உரிமையியல் வழக்குகள் அதிகரிக்க வேண்டும்.

நீதித் துறையுடன், நீதிமன்ற ஊழியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நீதிமன்ற பணிகள் செம்மையாக நடைபெற வழிவகுக்கும். இதற்கு நிவாரண நிதி வாயிலாக வழிவகுத்து கொடுத்துள்ள தலைமை நீதிபதி, தமிழக அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். இதன்மூலம் சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலன் பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. நீதி என்றாலே தமிழ்தான் மேலோங்கும். அதனால்தான் வள்ளுவன் ‘சீர்தூக்கி’ என்ற குறளை எழுதியுள்ளான்.

திருவள்ளுவர் எந்த மதத்தையோ, எந்த கடவுளையோ சார்ந்தவர் அல்ல. அவர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எந்தவொரு மதத்தையும் குறிப்பிடவில்லை. ஆனால், நீதி பரிபாலனத்தை அறத்துடன் செய்ய வேண்டும் என வள்ளுவர் திருக்குறளில் கூறியிருக்கிறார். நீதிமன்றத்தின் பெருமை குறையாமல், அறத்துடன் நீதி பரிபாலனங்கள் செயலாற்ற வேண்டும். தற்போதைய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தனது பணிக்காலத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவருக்கு எனது பாராட்டுகள். அதேபோல புதிதாக பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள ஆர்.மகாதேவன், முன்பை விட சிறப்பாக பணியாற்றுவார்” என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தலைமை வகித்தார். மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!