
சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், மூன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.
சிங்கப்பூர் – சென்னை- சிங்கப்பூர் இடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பயணிகள் விமான சேவை இயக்கப்படுகிறது. இந்த விமானம் தினமும் இரவு 10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு, பின்னர் இரவு 11.15 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும். சிங்கப்பூர் செல்லும் பயணிகள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகளும் அதிக அளவில் பயணிப்பதால், இந்த விமானத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.
செவ்வாய்க்கிழமை இரவு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் சென்னைக்கு 5 நிமிடம் முன்னதாகவே இரவு 9.55 மணிக்கு வந்தது. இரவு 11.15 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த விமானத்தில் பயணம் செய்ய 320 பயணிகள் காத்திருந்தனர். விமானி விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, விமானப் பொறியாளர்கள் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து, மூன்றரை மணி நேரம் தாமதமாக புதன்கிழமை அதிகாலை 2.47 மணிக்கு பயணிகளுடன் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.