
இத்தனை கோடி வசூலா? திகிலூட்டும் குணா குகை! மயான அமைதி! 2006ல் நடந்த அந்த சம்பவம்! மஞ்சுமெல் பாய்ஸ் உண்மைக் கதையா?
மஞ்சுமெல் பாய்ஸ் எனும் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில் அது உண்மை சம்பவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் உலக புகழ் வாய்ந்த சுற்றுலா தலமாகும். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர்.

இங்குள்ள பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், தூண் பாறை உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் சென்று வருவது வழக்கம்.
இதில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம்தான் குணா குகை. 1821 ஆம் ஆண்டு அமெரிக்கரான பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தை கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடத்திற்கு டெவில்ஸ் கிச்சன், பேய்களின் சமையலறை என்றே அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற் போல்தான் இந்த குணா குகை இருக்கும்.
சாலையில் செல்லும் போது இரு புறமும் இருக்கும் மரங்களின் வேர்களே பிரமிப்பூட்ட கூடியவகையில் இருக்கும். கமல் நடித்து 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்திற்கு பிறகு இந்த பேய்களின் சமையலறை என்பது குணா குகை என்றே அழைக்கப்படுகிறது.
அந்த படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் எடுக்கப்பட்டிருந்தது. இதுவரை குணா குகைக்குள் ஏராளமானோர் கால் தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் என்ற திரைப்படம் அந்த கதையை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதை கரு ஒரு உண்மை சம்பவம் ஆகும். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து குணா குகைக்குள் கால் தவறி விழுந்த நண்பனை உயிருடன் மீட்டு காப்பாற்றி அவரை மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் செல்வதுதான் இந்த படத்தின் கதைகளமாகும். இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த குணா குகை குறித்து 23 ஆண்டுகள் கழித்து மற்றொரு படம் வெளியான நிலையில் குணா குகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். இந்த குகையின் ஆழம் எத்தனை அடி என்று தெரியாத நிலையில் இதுவரை குகைக்குள் சென்றவர்களில் ஒருவரை தவிர யாருமே பிழைத்ததில்லை என்று சொல்கிறார்கள்.
அந்த ஒருவரை மையப்படுத்தியே மஞ்சுமோல் பாய்ஸ் படம் எடுக்கப்பட்டது. மயான அமைதியுடன் திகிலூட்டகூடிய வகையில் காணப்படும் இந்த குகைக்கு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவை சேர்ந்த சிலர் சுற்றுலா வந்தனர். அப்போது அவர்களில் சுபாஷ் என்பவர் 100 அடி ஆழ பள்ளத்தில் கால் தடுமாறி விழுந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு இந்த இடத்தில் விழுந்தவர்கள் யாருமே இதுவரை பிழைத்ததில்லை. எனவே நீங்களும் நண்பரை மறந்துவிட்டு சொந்த ஊருக்கு செல்லுங்கள் என்றனராம். ஆனாலும் பிடிவாதமாக இருந்த சுபாஷின் நண்பர்கள் தனது நண்பனை மீட்ட பிறகுதான் போவோம் என உறுதியாக இருந்தனர்.
தீயணைப்புத் துறையினர் குகைக்குள் இறங்க தயக்கம் காட்டினர். அப்போது சுபாஷின் நண்பர் சசிகுட்டன் என்பவர் நான் இறங்குகிறேன் என முன் வந்தார். அவருடைய மற்ற நண்பர்களும் தீயணைப்புத் துறையினரும் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. பிறகு கயிற்றை கட்டிக் கொண்டு சசிகுட்டன் இறங்கினார்.
அங்கு தனது நண்பர் சுபாஷை தேடினார். அப்போது ஒரு பாறையில் ரத்த வெள்ளத்தில் சுபாஷ் மயக்கத்துடன் கிடந்தை அறிந்த சசிகுட்டன் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் இன்னொரு கயிற்றின் மூலம் தனது நண்பரை தோளில் கட்டிக் கொண்டார். அவர்கள் இருவரையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
சுபாஷை உயிருடன் பார்த்த நண்பர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். இதையடுத்து சுபாஷை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுபாஷுக்கு நடந்தது என்ன என அவரது வீட்டில் கூட நண்பர்கள் சொல்லாமல் மறைத்து அருவியில் இருந்து அவர் விழுந்ததால் காயம் என்று மட்டுமே சொல்லியிருந்தனர். எப்போதும் உண்மை என்றாவது வெளியே வரும் என்பார்கள். அதற்கேற்ப அது மஞ்சுமோல் பாய்ஸ் மூலம் வெளியே வந்துவிட்டது.
இந்த குகை குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில் இந்த குகையின் ஆழம் 2500 அடி இருக்கும். இங்கு விழுந்த நபர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இங்கு நிறைய பேர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள், தவறி விழுந்திருக்கிறார்கள். அவர்களின் உடல் கிடைக்காததால் இந்த குகைக்கு மேற்பரத்தில் இருந்தபடியே அந்த ஆத்மாவுக்கு செய்யக் கூடிய அனைத்து சடங்குகளையும் அவர்களுடைய குடும்பத்தினர் செய்வார்கள் என கூறுகிறார்கள்.Vishnupriya R Oneindia
source: oneindia.com
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.