ஈரோடு இடைத்தேர்தல்: வெற்றிக் கோட்டை நெருங்கும் சீமான்!

ஈரோடு இடைத்தேர்தல்: வெற்றிக் கோட்டை நெருங்கும் சீமான்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்து இருக்கும் நிலையில் திமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறார் நாம் தமிழர் கட்சி சீமான்.

ஆளுங்கட்சி எதிர்ப்பு, பொங்கல் பரிசால் பொதுமக்களிடையே அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள், திமுக எதிர்ப்பு வாக்குகள் உள்ளிட்டவற்றால் வெற்றிக் கோட்டை நெருங்க வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார் சீமான்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர்14ஆம் தேதி உயிரிழந்தார்.

ஈரோடு கிழக்கு:

அவரின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தல்:

பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பத்தாம் தேதியிலிருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. மேலும் தேசிய கட்சியான பாஜகவும் தேர்தலில் போட்டி இல்லை என விலகிக் கொண்டுள்ளது.

சந்திரகுமார்:

சுமார் 30 சதவீதம் வாக்காளர் பலத்தை கொண்ட செங்குந்த முதலியார் சமூகத்தில் இருந்து திமுக வேட்பாளராக சந்திரகுமார் களமிறக்கப்பட்டிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை வாக்களித்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மூன்றாவது முறையாக வாக்களிக்க தயாராகி வருகின்றனர். கடந்த தேர்தலில் வெறும் பத்தாயிரம் வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, 6.37 சதவீத வாக்குகளை தனதாக்கினார். அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு சுமார் 60,000 வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் சீமான்:

இதனால் அதிமுக, பாஜகவின் வாக்குகள் நாம் தமிழருக்கு கிடைத்தால் கிட்டத்தட்ட 70 ஆயிரம் வாக்குகள் வரை கிடைக்கும் என நாம் தமிழர் கட்சி சீமான் கணக்கு போட்டு இருக்கிறார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஈரோடு கிழக்குத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவர் ஆதரவு வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என்பது சீமானின் கணக்கு. மேலும் 2019 எம்பி தேர்தலில் ஈரோடு தொகுதியில் சீதாலட்சுமி போட்டியிட்ட நிலையில் இடைத்தேர்தலிலும் அவரே களம் இறக்கப்பட்டுள்ளார்.

வியூகம் என்ன?:

இதனால் மக்களுக்கு நன்கு அறிமுகமான அவர் வாக்கு அறுவடை செய்ய தயாராக இருக்கிறார். பிரதான கட்சிகள் களத்தில் இல்லாதது, அதிமுக வாக்குகள், பொங்கல் பரிசு தொகுப்பால் மக்கள் அதிருத்தி என பல்வேறு விவகாரங்கள் இருக்கும்நிலையில் அதனை தனக்கு சாதகமாக்கி வெற்றிக் கோட்டை நெருங்குவது தான் சீமானின் வியூகம். அதே நேரத்தில் பெரியார் குறித்த பேச்சால் ஈரோட்டில் சீமானுக்கு எதிர்ப்பு இருக்கிறது. மேலும் கடந்த இடைத்தேர்தலின் போது அருந்ததிய சமூகம் குறித்து பேசியதும் சீமானுக்கு சிக்கல் தான். திமுகவுக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், கொஞ்சமாவது நாம் தமிழர் நெருக்கடி கொடுக்குமா என்பதை தேர்தல் முடிவுகளில் போது தான் பார்க்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!