தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் 251 பானைகளில் பொதுமக்கள் பொங்கலிட்ட நிகழ்ச்சியில் வடமாநில சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவில் 251 பானைகளில் பொதுமக்கள் பொங்கலிட்டனர். இதில் ஏராளமான புதுமணதம்பதிகளும் கலந்துகொண்டர். பானையில் பொங்கல் பொங்கிவரும் நேரத்தில் பொங்கலோ, பொங்கல் என்று குலவையிட்டு கரும்பு,கிழங்குவகைகள்,பழம் போன்றவற்றை படைத்து சூரியபகவானை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாதுறை சார்பில் கலந்து கொண்ட வடமாநில சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். பின்னர் பொங்கலை ரசித்து, ருசித்து சாப்பிட்ட பின்னர் அவர்கள் கூறுகையில் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதை பார்க்கும்போது எங்களுக்கு உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் உள்ளது என்றனர். விழாவையொட்டி சிலம்பாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், மேளம் உள்பட பல்வேறு விதமான கிராமிய நிகழ்ச்சிகள் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.