தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்பி தட்டிப்பறிக்கும் தமிழ்நாடு தொல்லியல்துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும் – தமிழ் மீட்சிப் பாசறை | நாம் தமிழர் கட்சி
தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தில், தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது . இதுவரை ஓராண்டாக இருந்துவந்த இந்தப் பட்டயப் பயிற்சி இப்போது இரண்டாண்டாக மாற்றப்பட்டுள்ளது; 2000 உரூபாயாக இருந்த மாத உதவித்தொகையினை 5000 ரூபாயாக மாற்றியதும், ஆண்டிற்கு 8 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த பயிற்சினை 20 மாணவர்களுக்கென உயர்த்தியுள்ளதும் வரவேற்கதக்கதே.
ஆனால், இப்பயிற்சியில் சேர்வதற்கு உரிய தகுதியாக இதுவரை முதுகலை தமிழ், வரலாறு, தொல்லியல் மற்றும் சமற்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்ததை இந்த ஆண்டு முதல் முதுநிலை அறிவியல் மற்றும் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சேரலாம் என்று அறிவிப்பு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கதக்கது; இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இது இந்தத் துறையில் தமிழ், வரலாறு, தொல்லியல் பட்டம் பெற்றவர்களை அப்புறப்படுத்தி ஆங்கில வழியில் பயின்ற அறிவியல், பொறியியல் படித்தவர்களைப் படிப்படியாகப் புகுத்தும் திட்டமிட்ட சதிச் செயலாகும்.
பொறியியல் படித்தவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களில் போதிய பயிற்சி மற்றும் புலமை இருக்காது என்பதால், அவர்களால் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளைச் சரியாக மேற்கொள்ள முடியாது. எனவே அவர்களுக்காக இந்த ஆண்டுமுதல் ஆங்கிலத்திலும் பயிற்சி நடைபெறும் என அறிவித்து, ஆங்கிலத்தையும் பயிற்று மொழியாகத் திட்டமிட்டுத் திணித்திருக்கிறது தமிழக தொல்லியல்துறை. இதற்காகவே 1973 முதல் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் என்றிருந்ததை இந்த ஆண்டு வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பில் தொல்லியல் நிறுவனம் என்று பெயர் மாற்றிவிட்டனர்.
ஏற்கனவே தமிழகத் தொல்லியல் துறை வெளியீடுகளில் சில, தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்திருக்கின்றன. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் துறையில் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தில் வெளியிடுவதை எப்படி ஏற்க முடியும்? இப்போதே இப்படி என்றால் ஆங்கிலவழி வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகும். எப்படி அரசுப் பள்ளியில் ஆங்கில வழியும் உண்டு என்று கூறிய பின் பல பள்ளிகளில் முற்றிலுமாக தமிழ்வழி காணாமல் போய்விட்டதோ அதுபோலவே எதிர்காலத்தில் தமிழகத் தொல்லியதுறையினை விட்டே தமிழ் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிற நிலை உருவாகும்.
தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் குறிப்பிட்ட சில சிறப்புத் துறைகளில் தமிழகத் தொல்லியல் துறையும் ஒன்று. தமிழில் முதுகலைப் பெற்றவர்கள் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையின் முதுகலை பட்டயப் பயிற்சிப் வகுப்பில் சேர்ந்து பயிற்சிப்பெற்று வேலைவாய்ப்பினை பெற்றுவந்தனர். வரலாறு, தொல்லியல் துறையில் முதுகலை பெற்றவர்களும் சேரலாம் என்றபோதும் அதிலும் தமிழ்வழியில் படித்துப் பட்டம்பெற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மற்ற துறைகளைப் போலல்லாது தமிழகத் தொல்லியல் துறை என்பது தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கும், தமிழ் வழியில் படித்து வரலாறு, தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்கும் மிக முதன்மையானத் துறையாகும்.
ஏனேனில் தொல்லியல் துறையின் பிரிவுகளாக உள்ள ஓலைச்சுவடிகள், கல்வெட்டடுகள், செப்பேடுகள், நாணயங்கள், மெய்கீர்த்திகள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்கும், வரலாற்று ஆவணமாக உள்ள தொல்தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதற்கும் தமிழ்மொழியில் புலமை பெற்றிருப்பது என்பது மிக மிக அடிப்படையானதாகும்.
வரலாற்றுக்கான பல அடிப்படைச் சான்றுகளில் மொழி முதன்மையான சான்று. தமிழ் மொழி மட்டுமன்று, எந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதோ அந்தப் பகுதி மொழியின் இலக்கியம், இலக்கணம் மற்றும் உள்ளடக்கங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு என்பது அடிப்படைத்
தேவையானது. அதுவும் தமிழில் கட்டாயத் தேவை என்பதைக் கடந்த கால ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. காரணம் தமிழ் நாட்டில் மட்டுமே தமிழ் இலக்கியம் சொல்கின்ற செய்திகள் “தொல்லியலில்” காணக் கிடைக்கின்றன. பிற உலக மொழி இலக்கியங்களின் பொருண்மைத் தொடக்கம் தொன்மத்தாலேயே அமைகின்றன. தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மட்டுமே மக்கள் வாழ்வியலை விளக்குவதாக அமைகிறது. எனவே தமிழ் நாட்டின் தொல்லியல் ஆய்வில் தமிழ்மொழி “தனிப் பெரும்” இடத்தைப் பெறுகிறது.
மேலும் தொல்லியலுக்குள் புதை விடங்கள், மரபுச் சின்னங்கள், அகழாய்வு செய்யும் நிலையிலான வாழ்விடங்கள் போன்றவையும் அமைந்துள்ளன. உலகத்திலேயே ஆகப் பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளன. அவற்றை அறிந்துகொள்வதற்குத் தமிழ் மொழி, இலக்கிய, மற்றும் தமிழ்நாட்டு வரலாற்று அறிவென்பது முதன்மைத் தேவை. அது மட்டுமன்றித் தொல்லியல் துறையின் ஒரு பிரிவான சுவடிக்கு யாப்பிலக்கண அறிவுடன் கூடிய இலக்கியம் படித்தவர்கள் தேவை. இவை எல்லாம் அறிவியலிலோ, பொறியியலிலோ இடம் பெறாது. எனவே தமிழகத் தொல்லியல்துறையின் உயிர்நாடியாக விளங்குவது தமிழ்மொழியே.
மேலும் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் சில பணி நிலைக்கான தேர்வில் இந்நிறுவனத்தில் பயின்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஏனென்றால் பிற நிறுவனங்களின் படிப்பில் தமிழ்நாட்டு தொல்லியல் குறித்த பகுதி மிகமிகக் குறைவே. எனவே தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள அந்தப்படிப்புகள் போதுமானதாக இராது. உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலேயே கல்வெட்டுக்கள் அதிக அளவில் உள்ளது என்பதால் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை தனித்து இயங்க வேண்டிய நிலை இருக்கிறது, எனவே சிறப்புக் கருதி நல்ல நோக்கத்தில் அது கட்டாயமாக்கப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில் வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம் , பன்முகத்தன்மை என்ற பெயரில் அறிவியல் மற்றும் பொறியியல் படித்தவர்களைத் தொல்லியல் துறையில் சேர்ப்பது மிகமிகத் தவறான முடிவாகும். அறிவியல் தொழில் நுட்பம் தேவை என்றால், இதுவரை ஓராண்டாக இருந்த படிப்பை இரண்டாண்டாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது களப்பணிகளைப் பயிற்சியில் இணைத்தது போல், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அறிவியல் திறன்நுட்ப பயிற்சிகளையும் பாடத்திட்டமாக இணைப்பதே சரியானதாக இருக்கும். அதைவிடுத்து அறிவியல், பொறியியல் படித்தவர்களுக்கு இசைவளிப்பது பொறுத்தமானதன்று.
ஏற்கனவே தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்துவக் கல்லூரியில், தமிழ்ப் படித்தவர்களுக்கென இருந்துவந்த சிறப்பு வழியை முற்றிலுமாக ஒழித்து, அறிவியல் படித்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது போன்று, தொல்லியல் துறையிலும் பொறியியல், அறிவியல் படித்தவர்களை நுழைத்தால் தமிழ், வரலாறு, தொல்லியல் படித்தவர்கள் ஒரங்கட்டப்படுவார்கள். இந்த நிலை உருவானால் தமிழே படிக்காமல் ஆங்கில வழியில் படித்து விட்டு அறிவியல், பொறியியல் படித்தவர்கள் உள்ளே வந்து தமிழை இரண்டாம் நிலைக்குத்தள்ள வாய்ப்பு மிகஅதிகம்.
மேலும் பொறியியல் மற்றும் அறிவியல் படித்தவர்களுக்கென இயந்திரவியல், மின்னணுவியல், கட்டிடவியல், கணிணித்துறை, தொழிநுட்பத்துறை, வாகனவியல், வணிகத்துறை, விமானம், விண்வெளி உள்ளிட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தொல்லியல் படித்தவர்களுக்கு இதைவிட்டால் வேறுதுறைகளில் பணிவாய்ப்பு இல்லை. ஏற்கனவே தொல்லியல் படித்தவர்களை வரலாற்றுத் துறையில்கூடப் பணிநியமனம் செய்யத் தடை இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்குப் பேரிடியாய் அமையும். எனவே தொல்லியல் துறை இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
மருத்துவம், பொறியியல் படிப்புக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் குறிப்பிட்ட சில பாடங்களைக் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும் என்ற நிலை இருப்பதுபோல் தொல்லியல் துறையிலும் அதைசார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பயிற்சி பெற வாய்ப்பளிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இருந்த அந்த விதியினை எவ்வித மாற்றமும் செய்யாமல் இனியும் தொடர வேண்டும்.
தொல்லியல்துறை என்பது வரலாற்றை ஆய்வுசெய்து ஆவணப்படுத்தும் இடம். இதில் தவறு நடப்பது ஓர் இன அழிப்பிற்குச் சமமானதாகும். தொல்லியல் ஆய்விற்குத் தேவைப்படும் மிகச்சிறிய பகுதியான அறிவியல், பொறியியல் பாடங்களை இணைப்புப் பாடமாக வைத்துக் கொள்ளலாமே தவிர அவற்றைத் தகுதிக்கான முதன்மை பாடமாக வைத்தல் ஆய்வு முடிவுகளும், விளைவுகளும் தமிழுக்கும், தமிழக வரலாற்றுக்கும் எதிராகவே அமையவே வழிவகுக்கும்.
எனவே, தமிழகத் தொல்லியல் ஆய்விற்கு அடிப்படைத் தேவையான தமிழ், வரலாறு, தொல்லியல் படித்தவர்களைத் தொல்லியல் துறையைவிட்டே அப்புறப்படுத்தும் வஞ்சக நோக்கத்துடன் தமிழகத் தொல்லியத்துறையால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறை வலியுறுத்தி உள்ளது.