குவைத் தீ விபத்து: த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்

சென்னை: குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

குவைத் தீ விபத்து: குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கேரளா அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சின்னதுரை (42) உள்ளிட்ட 5 தமிழர்கள் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!